பாலிடெக்னிக்கில் பயிலும் 72 வயது ‘இளைஞர்’ செல்வமணி! | 72 Year Old Youth Selvamani Learning Polytechnic
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 72 வயது முதியவர் சேர்ந்து இளைஞர் போல ஆர்வமுடன் கல்வி பயின்று வருகிறார்.
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (72). ஐடிஐ படிப்பு முடித்த இவர், பின்னர் எம்.காம்., எம்பிஏ படிப்புகளையும் முடித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். பணி ஓய்வுபெற்று 10 ஆண்டுகள் கடந்த நிலையில், கல்வியின் மீது ஆர்வம் கொண்டு புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்து டிப்ளமோ எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் வடலூர் பகுதியில் இருந்து நாள்தோறும் பேருந்தில் கல்லூரிக்கு வந்து செல்கிறார். சக மாணவர்களைப் போல் தோளில் புத்தகப் பையை சுமந்து கொண்டு, கையில் மதிய உணவை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு உரிய நேரத்தில் வந்து செல்கிறார்.
காலை 9 மணிக்கு கல்லூரிக்கு வரும் அவர் மாலை 5 மணி அளவில் கல்லூரி முடிந்து ஊர் திரும்புகிறார். இவருடன் பழகும் சக மாணவர்கள் பலரும் அவரை தாத்தா என்று அன்புடன் அழைக்கின்றனர். கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் இவரின் கல்வி ஆர்வத்தை வியந்து, பாராட்டி வருகின்றனர்.
கல்விக்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 72 வயதிலும் இளைஞரை போல கல்லுாரியில் வலம் வரும் இவரை, ஆசிரியர்கள், சக மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். மற்ற மாணவர்களுக்கும் இவரது கல்வி ஆர்வம் ஒருவித உந்துதலை ஏற்படுத்தியுள்ளது. படிப்பின் மீது தீவிரமான பற்று இருப்பதால், இந்த வயதிலும் தான் தொடர்ந்து படித்து வருவதாக செல்வமணி கூறுகிறார்.