செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்பு: இந்தியா முதலிடம் என ஆய்வில் தகவல் | Deaths while taking selfie India ranks first globally
சென்னை: செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் எதிர்பாராத அசம்பாவிதத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து அவ்வப்போது நாம் செய்திகளில் பார்ப்பது உண்டு. இந்த சூழலில் இது குறித்து அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில் உலக அளவில் இந்தியாவில்தான் செல்ஃபி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கடந்த 2014 மார்ச் முதல் 2025 மே மாதம் வரையில் ஏற்பட்ட செல்ஃபி உயிரிழப்பு தரவுகளை அடிப்படையாக கொண்டு ‘தி பார்பர் லா ஃபிர்ம்’ என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. கூகுளில் கிடைத்த தகவல்கள் தான் இந்த ஆய்வின் அடிப்படை.
அந்த வகையில் இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 271 விபத்துகள் செல்ஃபி எடுக்கும்போது ஏற்பட்டுள்ளது. அதில் 214 பேர் உயிரிழந்துள்ளனர். 57 பேர் காயமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த காலகட்டத்தில் செல்ஃபி மோகத்தால் ஏற்பட்ட வியாபிரீதங்களில் 42.1% இந்தியாவில் நடந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதி, ரயில் பாதை அல்லது மலை உச்சி, உயரமான கட்டிடம் என ஆபத்து நிறைந்த இடங்கள், இந்தியாவில் நிலவும் சமூக வலைதள மோகம் உள்ளிட்டவை இதற்கு காரணம் என ஆய்வை மேற்கொண்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 37, ரஷ்யாவில் 19, பாக்சிதானில் 16, ஆஸ்திரேலியாவில் 13 என செல்ஃபி எடுக்கும்போது உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
பொதுநலன் கருதியோ அல்லது பாதுகாப்பு கருதியோ அரசு பல இடங்களில் போட்டோ எடுக்கத் தடை விதித்துள்ளது. அதுபோல சுற்றுலாத் தலங்களிலும் பிற ஆபத்தான முனைகளிலும் செல்ஃபி எடுக்கவும் தடைவிதித்து, ‘இது செல்ஃபி தடைசெய்யப்பட்ட பகுதி’ என அறிவிப்புச் செய்யவேண்டும். இதையும் மீறி ஆபத்தான பகுதிகளில் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவோரை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என செல்ஃபிக்கு எதிரான குரல்கள் வலுக்கின்றன.