பழநிக்கு 2 முறை வந்த காந்தியடிகளை நினைவுகூரும் பழமை மாறாத வீடும், தங்கும் விடுதியும்! | Memories Recollected at Palani House and Hotel of Gandhi Visit
தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் கால்தடம் பட்ட பழநியில் அவர் தங்கியிருந்த வீடும், கூட்டம் நடத்திய விடுதியும், நினைவு சின்னமும் இன்னும் அவரை நினைவு கூறுகின்றன.
1932-ல் அகில இந்திய ஹரிஜன சேவக சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, காந்தியடிகளின் வழிகாட்டுதலின் பேரில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முன்னேற்றப் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வந்தன. நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல முன்னேற்ற திட்டங்களை காந்தியடிகள் வகுத்தார். அத்திட்டங்களில் ஒன்று தான், ஆலய பிரவேசப் (நுழைவு) போராட்டம். ஹரிஜன முன்னேற்ற வேலைகளுக்கு மதுரை அ.வைத்தியநாத ஐயரை காந்தியடிகள் கேட்டுக் கொண்டார். அதையேற்ற வைத்தியநாத ஐயர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்தார். 1934-ல் ஹரிஜன நிதி திரட்டுவதற்காக காந்தியடிகள் தமிழ்நாடில் பயணம் மேற்கொண்ட போது, முதன் முறையாக ஜனவரி 29ம் தேதி முதன் முறையாக பழநிக்கு வந்தார்.
மலைக்கோயில் செல்ல மறுப்பு: பழநி நகர சுதந்திர போராட்ட வீரர்களை சந்தித்து, அவர்களிடம் இருந்து நன்கொடையாக ரூ.1,000 பெற்றுக் கொண்டார். அந்த காலக்கட்டத்தில் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த, அவர் சுவாமி தரிசனத்துக்கு செல்ல மறுத்துவிட்டார். மலைக்கோயிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் செல்ல என்று அனுமதி வழங்கப்படுகிறதோ அன்று மலைக்கோயிலுக்கு வருகின்றேன் என்று கூறிப் பிரசாதங்களை மட்டும் பெற்றுக் கொண்டு சென்றார்.
தொடர்ந்து, பழநி அருகேயுள்ள வன்னியர் வலசு எனும் கிராமத்துக்கு சென்றார். 1939-ல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 5 பேருடன், நாடார் சமூகத்தை சேர்ந்த ஒருவரையும் அழைத்துக் கொண்டு வைத்தியநாத ஐயர் தனது தலைமையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் மேற்கொண்டார். அப்போது, அவரை பாராட்டி காந்தியடிகள் கடிதம் எழுதினார். அச்சமயம், நாடு முழுவதும் ஆலயப் பிரவேசப் பேராட்டம் தீவிரம் அடைந்தது.
பழநி நந்தனார் விடுதி: ஆலய பிரவேசப் போராட்டத்தை நினைவு கூறவும், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்குவதற்காகவும் பழநி கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள இடத்தில் விடுதி ஒன்றை கட்டுமாறு ஸ்ரீமான் சேத் ஜூல்கிஷோர் பிர்லாவிடம் காந்தியடிகள் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கை யை ஏற்று, தற்போது காந்தி மண்டபம் என்றழைக்கப்படும் ‘ஸ்ரீ நந்தனார் விடுதி’ தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கி செல்வதற்காக கட்டப்பட்டது. அதனை, ஸ்ரீமான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் திறந்து வைத்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பழநி மலைக்கோயிலில் ‘ஆலய நுழைவு’ அனுமதி அளிக்கப்பட்டதன் காரணமாக, 1946-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபட்ட பின், இராஜாஜியுடன் சிறப்பு ரயிலில் பழநிக்கு வந்தார். அப்போது, வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்து சே.அ.சேசய்யர் காந்தியடிகளை வரவேற்றார். பழநி ரயில் நிலையம் அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்புப் பற்றி காந்தியடிகள் சொற்பொழிவு ஆற்றினார்.
தொடர்ந்து, காந்திடியடிகளும் ராஜாஜியும் பல்லக்கு போன்ற நாற்காலியில் அமர்ந்து சென்று மலைக்கோயிலில் முருனை தரிசித்தனர். அப்போது, பழநி நகர தேசியவாதிகளான சே.அ.சேசய்யர், பெ.ராமச்சந்திரன் செட்டியார், கே.ஆர்.செல்வம் ஐயர், பி.எஸ்.கே.லட்சுமிபதிராய் ஆகியோர் உடன் சென்றனர்.

முன்னதாக, இந்த நந்தனார் விடுதியில் சிறிது ஓய்வு எடுத்து விட்டு, தேசியவாதிகளுடன் கலந்துரையாடினார். அவர் வந்து சென்றதன் நினைவாக, இந்த நந்தனார் விடுதி, ‘காந்தி மண்டபம்’ என்று இன்னும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது. அவர் வந்த போது, இருந்தது போலவே தற்போதும் அந்த விடுதி பழமை மாறமால் காந்தியடிகளின் நினைவை சுமந்து நிற்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட இந்த விடுதி, தற்போது அனைத்து சமூக மக்களும் தங்கி செல்லும் இடமாக மாறியுள்ளது.
பழநி முருகன் கோயிலுக்கு வந்த காந்தியடிகள், ‘பழநி கோயிலில் வழிபட முடிந்தமைக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று, அங்கு வைக்கப்பட்டிருந்த ஏட்டில் எழுதினார். அன்று இரவு பழநி அருகே அ.கலையம்புத்தூர் அக்ரஹாரத்தில் உள்ள நாட்டுப்பற்றுமிக்க வழக்கறிஞர் கே.ஆர்.சுந்தரராஜன் வீட்டில் தங்கினார். அங்கிருந்து மறுநாள் காலையில் சென்னை புறப்பட்டு சென்றார். இன்னும் காந்தியடிகள் தங்கியிருந்த வீடும், அறையும் அவரது நினைவுகளை நமக்கு வெளிப்படுத்தி வருகின்றன.

தனது வாழ்நாளில் பழநிக்கு காந்தியடிகள் இருமுறை வந்தது குறிப்பிடத்தக்கது. வந்த காந்தியடிகளின் ள்ளார் என்பது குறிப்பிடதஅவரது, வருகையை சிறப்பிக்கும் வகையில் பழநி நகர் வஉசி பேருந்து நிலையம் நுழைவுப் பகுதியில் 1985-ம் ஆண்டு நினைவு சின்னமாக காந்திடி யகளின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. காந்தியடிகள் பழநிக்கு வந்த காலச்சுவடுகளை 79 ஆண்டுகளாக அவர் தங்கியிருந்த வீடும், அவர் கால் தடம் பட்ட நந்தனார் விடுதியும், நினைவு சின்னமும் நமக்கு நினைவு கூறுகின்றன.