EBM News Tamil
Leading News Portal in Tamil

உணவு சுற்றுலா: கும்பகோணம் டிகிரி காபி  | Kumbakonam Degree Coffee


தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் ‘கும்பகோணம் ஃபில்டர் காபி’ கிடைக்கும் என்கிற பதாகைகளை அதிக அளவில் பார்க்க முடியும். அந்த அளவுக்குக் கும்பகோணத்து காபி பிரபலம். வெவ்வேறு பகுதிகளில் கும்பகோணம் ஃபில்டர் காபியைக் குடித்தாலும், கும்பகோணத்தில் அதிகாலை ஒரு ஃபில்டர் காபியைப் பருகுவது தனி சுகம்!

காபி பிரியர்களுக்கோ விதவிதமான காபி ரகங்களை ருசித்துப் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆவல் இருப்பது இயல்பு. அவ்வகையில் தனித்துவமாகத் தயாரிக்கப்படும் கும்பகோணம் ஃபில்டர் காபிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கோயில்களால் சூழ்ந்திருக்கிறது கும்பகோணம். அதிகாலையிலேயே விழித்துக்கொள்கிறது நகரம். அப்படி விழித்துக்கொள்வதில் ஃபில்டர் காபி கடைகள் முக்கியமானவை. தெருக்குத் தெரு காட்சி அளிக்கும் ஃபில்டர் காபி கடைகளின் முகப்பில் டபரா செட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பகுதி எங்கும் ஃபில்டர் காபியின் மணம் நாசியைத் துளைக்கிறது. கோயில்களுக்குச் செல்வோரும் நடைப்பயிற்சி செய்வோரும் அலுவல்ரீதியாகப் பயணம் மேற்கொள்வோரும் ஒரு ஃபில்டர் காபியைக் குடித்துவிட்டுத்தான் அடுத்த வேலையைத் தொடங்குகிறார்கள்.

டிகிரி காபி: கும்பகோணம் ஃபில்டர் காபிக்கு, ’டிகிரி காபி’ என்று ஒரு பெயரும் உண்டு. ‘டிகிரி’ என்றால் பாலின் அடர்த்தியை மையப்படுத்திய குறியீடு. தண்ணீர் சேர்க்காத கெட்டியான பாலே டிகிரி காபிக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு ஃபில்டரில் காபித் தூளோடு வெந்நீர் கலந்து டிகாக்‌ஷன் தயாரித்துக்கொள்கிறார்கள். டம்ளரில் முதலில் சர்க்கரையைப் போட்டு, சூடான டிகாக்‌ஷனை ஊற்றுகிறார்கள். கனலில் கொதித்துக்கொண்டிருக்கும் சூடான பாலை இரண்டு மூன்று முறை மேலும் கீழும் ஆற்றி டிகாக்‌ஷன் இருக்கும் டம்ளரில் ஊற்றுகிறார்கள். டிகாக்‌ஷனோடு பால் சேர்ந்து, நுரைத் ததும்ப கொடுக்கிறார்கள்.

பாலில் ஆடை சேராத வகையில் பார்த்துக் கொள்கிறார்கள். கெட்டியான பாலைப் பயன்படுத்துவதுதான் கும்பகோணம் ஃபில்டர் காபியின் தனித்துவமான சுவைக்கு முக்கியக் காரணம். மேலும் டிகாக்க்ஷன் தயாரிக்கும் பதம், அதில் பால் சேர்க்கும் தருணம் போன்றவை ஃபில்டர் காபியின் சுவையை நிர்ணயிக்கின்றன. முதலில் நுரை நாவில் படரும்படி ஒரு முறை சுவைத்துவிட்டு, டபராவில் ஓர் ஆற்று ஆற்றி சர்க்கரை, டிகாக்‌ஷன் நன்றாகக் கலந்த பின்பு பருக, ஃபில்டர் காபியின் சுவையை முழுமையாக உணர முடியும். குடித்து முடித்ததும் காபி கொடுக்கும் உற்சாகத்தோடு சேர்த்து, நீண்ட நேரத்துக்கு நாவிலேயே காபியின் சுவையும் தங்கிக்கிடக்கிறது. பித்தளைப் பாத்திரங்களுக்குப் பெயர் பெற்ற கும்பகோணத்தில் பாரம்பரியமிக்கப் பழமையான கடைகளில் பித்தளை டபராக்களில்தான் இப்போதும் ஃபில்டர் காபியைக் கொடுக்கிறார்கள். சில கடைகளில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் கொடுக்கிறார்கள். கும்பகோணத்துக்குச் சுற்றுலா வரும் பயணிகள் பழமையான கோயில்களைப் பார்த்துவிட்டு, தவறவிடாமல் சுவைக்க வேண்டியது ஃபில்டர் காபியை!

கட்டுரையாளர், சித்த மருத்துவர்.