உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், சுகாதார அமைச்சகங்கள் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
தாய்ப்பால், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கான முதன்மை ஆதாரமாக உள்ளது. இதில் கொழுப்பு, புரதம் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் உள்ளன. மேலும், ஒரு குழந்தையை நோய்த்தொற்று, அழற்சிக்கு எதிராகப் பாதுகாக்க உதவுகிறது என மருத்துவர்கள் தெரிவிக் கின்றனர். எனவே முதல் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் இதுகுறித்த மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு மதுத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேசகுமார் தலைமை வகித்து பேசுகையில், இந்த தாய்ப்பால் வார விழாவில், செவிலிய மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவர்களின் விளக்கக் கூட்டங்கள், வருங்கால தாய்மார்களான பெண்கள் பயிலும் கல்லூரிகளில் தாய்ப்பாலின் நன்மை விளக்குதல், வினா-விடைப் போட்டிகள் இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதன் முக்கிய நோக்கம், குழந்தைகளுக்கு 2 ஆண்டுகள் வரை வாய்ப்பிருப்பின் தாய்ப்பால், 6 மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே என்பதை உறுதிபடுத்துவதாகும். மேலும் கருத்தரிப்பு முதல் குழந்தையின் 2 வயது வரை உள்ள “பொன்னான 1000 நாட்களில்” ஊட்டச்சத்து மிகவும் அவசியம் என்றார்.
தாய்ப்பால் குறித்து, குழந்தைகள் நலத் துறை இயக்குநர் அனுராதா, இந்திய குழந்தைகள் துறை சங்க மதுரை கிளைத் தலைவர் நந்தினி குப்பு சாமி, செயலர் செந்தில் குமார், பொருளாளர் பிரசன்னா ஆகியோர் கூறியது: தாய்ப்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் தடுப்பூசியாகும். இது, தாய்மையின் முக்கிய அடையாளமாகும். இது நமது மனித உயிர்களுக்கென்றே உரித்தான வகையில், அனைத்து தேவையான சத்துக்களையும் உள்ளடக்கியது. குழந்தைகளை கிருமித் தாக்கத்தில் இருந்து காத்தல், சீரான உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுதல் போன்ற பல்வகை நன்மைகளை உள்ளடக்கியது.
தாய்ப்பாலில் முதலீடே வருங்காலத் தலைமுறையின் முதலீடாகும் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, நிகழாண்டுக்கான தாய்ப்பால் வார விழா நடைபெறுகிறது. எனவே குழந்தைகளின் நம்பிக்கையான எதிர்காலத்துக்கு குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், என அவர்கள் தெரிவித்தனர்.
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்: தாய்ப்பால் குழந்தைகளை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக் கிறது. மேலும் சரியான வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. செரிமானத்துக்கு எளிதானது என்பதால், முதிர்ச்சியடையாத குடலுக்கு ஏற்றதாகவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால், தாய்க்கு மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. கர்ப்ப காலத்தில் விரிவடைந்த கருப்பை இயல்பு நிலைக்கு திரும்பவும், தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பையும் உருவாக்குகிறது. மேலும், தாயின் உடல் எடை கூடாமல் இருக்கவும் உதவுகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.