EBM News Tamil
Leading News Portal in Tamil

சென்னை மாநகராட்சி சார்பில் 70 பூங்காக்களில் நூலகம்! | Libraries on 70 Parks on Behalf of Chennai Corporation!


சென்னை மாநகராட்சி சார்பில் 70 பூங்காக்களில் நூலகம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 2021ம் ஆண்டுக்கு முன்பு 704 பூங்காக்களும், 610 விளையாட்டு அரங்குகளும் இருந்தன. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.81 கோடியில் 204 பூங்காக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. ரூ.24 கோடியில் 37 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் தற்போது 908 பூங்காக்களும், 724 விளையாட்டு அரங்குகளும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ரூ.8 கோடியில், 32 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2025 – 26-ம் நிதியாண்டில் ரூ.60 கோடியில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், 200-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் ரூ.30 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன.

மாநகராட்சி பூங்காக்களில், ராகவேந்திரா பூங்கா மற்றும் மே தின பூங்காவில் சிறிய நூலகங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப் பட்டன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மேலும் பல பூங்காக்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி 70 பூங்காக்களில் நூலகம் அமைக்க இருப்பதாகவும், இது பொதுமக்களிடையே செய்தித்தாள் மற்றும் புத்தக வாசிப்பு திறனை அதிகரிக் கும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.