பக்கவாத நோயாளிகளுக்கு ‘பொடி திமிர்தல்’ சிகிச்சை – பவானி அரசு மருத்துவமனையில் அறிமுகம் | Treatment for Stroke Patients – Introduced at Bhavani Govt Hospital
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘பொடி திமிர்தல்’ சிகிச்சையும், சிறுநீரக பாதிப்புள்ளவர்களு க்கு வர்மக்கலை மற்றும் இஞ்சி ஒற்றட சிகிச்சையும் பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையின் ஒரு பிரிவாக, மருத்துவர் எஸ்.கண்ணுசாமி தலைமையில் சித்த மருத்துவப் பிரிவு செயல் பட்டு வருகிறது. இப்பிரிவில், தொக்கனம் (மசாஜ்), வர்மக்கலை, நீராவிக் குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், முதுகு தண்டு வட நோய்களுக்கு புறவளையம், பட்டி கட்டல், பற்று போடல், சுட்டிகை, ஒற்றடம், சிரோதாரை (சிரசு எண்ணெய்) உள்ளிட்ட 15 வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
மூலிகைத் தோட்டம்: மேலும், நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மருத்துவமனை வளாகத்திலேயே 5,000 சதுர அடியில், 125 அரிய மூலிகைச் செடிகள் கொண்ட தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவப் பிரிவு தியான மண்டபத்தில், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தியானம் மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
மத்திய அரசின் குழு பாராட்டு: மத்திய அரசின் ‘காய கல்ப்’ மருத்துவக் குழுவினர் மற்றும் தேசிய தர உறுதிச் சான்றிதழ் குழுவினர், தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள், பவானி அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப்பிரிவு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டம் மற்றும் பல்வேறு சிறப்பு சிகிச்சைகளை பார்வையிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சிறந்த மருத்துவர் விருதினையும் இம்மருத்துவமனை மருத்துவர் கண்ணுசாமி பெற்றுள்ளார்.
பொடி திமிர்தல் சிகிச்சை: இந்நிலையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘பொடி திமிர்தல் சிகிச்சை’ சித்த மருத்துவப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் எஸ்.கண்ணுசாமி கூறியதாவது: சித்த மருத்துவத்தில் பொடி திமிர்தல் உள்ளிட்ட 32 வகையான வெளிப்புற மருத்துவ முறைகள் உள்ளன. பொடி திமிர்தல் சிகிச்சையில், கறுப்பு கொள், மஞ்சள் தூள், பச்சை கற்பூரம் ஆகியவற்றை பொடியாக்கி, கலவை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நோயின் தன்மைக்கு ஏற்ப இந்த மூலிகை கலவை மாறுபடும்.
இந்த கலவைப் பொடியைக் கொண்டு, பாதம் முதல் கழுத்து வரையிலும், உடலின் முன், பின் பகுதிகளில் 21 முறை தடவப்படுகிறது. கைகளில் உள்ளங்கையில் தொடங்கி, தோள்பட்டை வரையிலும் பொடி தடவப்படுகிறது. 45 நாட்களுக்கு இத்தகைய பொடி திமிர்தல் சிகிச்சையை அளிக்கிறோம். இதன் மூலம், பக்கவாதம் மற்றும் மூளை முடக்குவாத நோயாளிகளுக்கு தசை, தசை நார்கள் பலப்படுகின்றன.
நரம்புகள் தூண்டப்பட்டு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் நரம்புக் கோளாறுகளுக்கு தீர்வு கிடைக்கிறது. மேலும், உடல்வலி, மூட்டு வலி உள்ளவர்களுக்கு, நிண நீர் ஓட்டத்தை மேம்படுத்தி கழிவுகளை வெளித்தள்ளி உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது. இந்த சிகிச்சையால், கொழுப்பு கரைவதால் உடல் எடை குறையும். சொரியாசீஸ் நோய்களுக்கும் பலன் அளிக்கும்.
இஞ்சி ஒற்றடம்: இதோடு, சிறுநீரக பாதிப்பு தொடர்பான நோய்களுக்கு வர்மக்கலை சிகிச்சையும், ஒரு சில வர்மக்கலை பயிற்சியும் அளிக்கிறோம். இத்துடன், நோயாளியின் இடுப்பு, முதுகு பகுதியில் இஞ்சி துருவலை, நல்லெண்ணைய் சேர்த்து ஒற்றடம் தருகிறோம். இதன் மூலம்,நோயின் தன்மை குறைவதுடன், நல்ல மாற்றங்களை அறிய முடிகிறது. இந்த சிகிச்சை முறையை தொடர்ந்தால் நோய் குணமாக வாய்ப்புள்ளது.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.