துறைமுகம், கடல் உணவுகள், சுவைமிக்க தின்பண்டங்கள் எனக் கலாச்சாரரீதியாகத் தனித்துவமிக்க மாவட்டம், தூத்துக்குடி. பொருளாதாரரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரம் தூத்துக்குடி. மீன் உணவு வகைகளுக்குப் பெயர் போன தூத்துக்குடியில் மற்றொரு சிறப்புத் தின்பண்டம் ‘மக்ரூன்.’ முட்டையின் வெண்கருவை மையமாக வைத்து, முந்திரியின் ஆதரவோடு தயாரிக்கப்படும் இனிப்புதான் மக்ரூன்.
வரலாற்றுரீதியாகப் பார்த்தால், கடலோரமாக இருக்கும் நகரங்களில் அந்நியப் படையெடுப்புகளின் காரணமாக, கலாச்சாரரீதியிலும் உணவியல் சார்பிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அவ்வகையில் தூத்துக்குடியில் ஆட்சிபுரிந்த போர்ச்சுகீசியர்கள் கொடுத்த பரிசுதான் இந்த மக்ரூன்! தூத்துக்குடியில் அறிமுகப்படுத்தப்பட்டதால் ‘தூத்துக்குடி மக்ரூன்’ எனப் பெயர் பெற்றது.
எப்படித் தயாரிக்கப்படுகிறது? – முட்டை, முந்திரி, சர்க்கரை ஆகிய மூன்று பொருட்களை மட்டும் வைத்துத் தயாரிக்கப்படும் ஆரோக்கிய சிற்றுண்டி மக்ரூன். முட்டையின் வெள்ளைக் கருவைத் தனியாகப் பிரித்து வைத்துக்கொள்கிறார்கள். இயந்திரத்தில் வெண்கருவைப் போட்டு நன்றாகக் கலக்குகிறார்கள். வெண்கரு நுரைத்து வரும்போது, பொடித்து வைத்த சர்க்கரையைச் சேர்த்து தொடர்ந்து கலக்குகிறார்கள். சுவைமிக்க மக்ரூனைத் தீர்மானிப்பது நன்றாகக் கலக்கப்படும் நயத்தில்தான் இருக்கிறது. பிறகு பொடித்து வைத்த முந்திரிப் பருப்பையும் சேர்த்து, நன்றாகக் கலக்கிப் பிசைகிறார்கள்.
குறிப்பிட்ட பக்குவத்துக்கு மாவு வந்ததும், பிசைந்த மாவைச் சுருள் காகிதங்களுக்குள் போட்டு நயமாகப் பிழிய, மக்ரூனுக்கு வடிவம் கிடைக்கிறது. தட்டுகளில் வார்த்த மக்ரூன்களைப் பெரிய விறகடுப்புக்குள் வைத்து பல மணி நேரம் வேக வைக்கிறார்கள். சிறிய அளவில் எனில் இப்போது ஓவனும் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பாரம்பரியமாக விறகடுப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மக்ரூன்களின் சுவை தனித்துவமாக இருக்கும் என்கின்றனர்.
வெண்ணெய்யை வைத்து சுருள் வடிவத்தில் சிலை செய்தது போன்றதொரு தோற்றத்தைக் கொடுக்கிறது மக்ரூன். தின்பண்டத்தின் வடிவமே சாப்பிடத் தூண்டுகிறது. நொறுவைத் தன்மையுடன் இருக்கும் வெண்ணிற மக்ரூனைக் கடித்ததும் நாவெங்கும் இனிப்புச் சுவை விரைந்தோடுகிறது.
முந்திரி கொடுக்கும் சுவை: ஓர் உணவுப் பொருளுக்குக் கூடுதல் வாசனை, சுவையைக் கொடுக்க முந்திரி உதவும். அவ்வகையில் மக்ரூனின் தனித்துவமான சுவைக்கு முந்திரிப் பருப்பும் முக்கியக் காரணமாகிறது. கெட்ட கொழுப்பின் அளவுகளைக் குறைத்து, இதயத்துக்கான பாதுகாப்பை அளிக்க முந்திரி சிறப்பான தேர்வு. முந்திரிப் பருப்பில் இருக்கும் நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள், புரதம், நார்ச்சத்து போன்றவை உடலுக்கு நோய் எதிர்க்கும் தன்மையை அளிக்கும். உடலின் வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்துவதிலும் முந்திரிக்குப் பங்கு இருக்கிறது என்கிறது ஆய்வு.
முட்டையின் பங்கு: வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் என உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டங்களைக் கொண்டிருக்கிறது முட்டையின் வெண்கரு. உடலுக்கு ஊட்டத்தைக் கொடுப்பதற்கும், சோர்வைப் போக்குவதற்கும் முட்டையின் வெண்கரு சிறப்பானது. வயிற்றுப் புண்களின் தீவிரத்தைக் குறைப்பதிலும் முட்டையின் வெண்கரு நல்ல பலனைக் கொடுக்கும். சுவையான மக்ரூன் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கட்டுரையாளர், சித்த மருத்துவர்.