சுதந்திரப் போராட்டத்தில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட காமராஜர், 1923இல் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பங்கேற்றார். 1930இல் பிரிட்டிஷ் அரசு நிர்வாகம் கொண்டுவந்த உப்புச் சட்டத்தை எதிர்த்து காந்தி உப்புச் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். தமிழ்நாட்டில் அந்தப் போராட்டத்துக்கு ராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை தொண்டர்கள் சென்றனர். அப்போராட்டத்தில் தமது ஆதரவாளர்களுடன் பங்கெடுத்த காமராஜர் கைது செய்யப்பட்டார்.
இதற்காக அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கல்கத்தாவில் உள்ள அலிபூர் சிறையில் காமராஜர் அடைக்கப்பட்டார். எனினும், 1931இல் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின்படி அவர் 1931 மார்ச்சில் விடுவிக்கப்பட்டார். இதுவே, காமராஜர் பொது வாழ்வில் எதிர்கொண்ட முதல் சிறைவாசம்.
பின்னர், லண்டனில் காந்தி-இர்வின் ஒப்பந்தம் வெற்றிகரமாக அமையாததால் இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டிலிருந்து காந்தி வெளியேறினார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காமராஜரை பிரிட்டிஷ் அரசு கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தது. பிறகு, அவர் 1933 ஜனவரி 9இல் விடுதலையானார். இது காமராஜரின் இரண்டாவது சிறைவாசம். 1933இல் ஆளுநர் சர் ஜான் ஆண்டர்சனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக காமராஜர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
1940இல் விருதுநகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதாகி வேலூர் சிறையில் காமராஜர் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் இருந்தபடியே விருதுநகர் நகராட்சித் தேர்தலில் நின்று காமராஜர் வெற்றி பெற்றது இன்னொரு சிறப்பு.
1942இல் ஆகஸ்ட் புரட்சி இயக்கத்தில் கலந்து கொண்டமையால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முறை காமராஜர் சிறையில் 3 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். மொத்தமாகத் தன் வாழ்நாளில் சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். – மிது
ஜூலை 15 – காமராஜர் பிறந்தநாள்