தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்களில் காமராஜர் முக்கிய மானவர். தனது நிர்வாகத்துக்காக மட்டுமல்லாமல், எளிய வாழ்வுக்காகவும் காமராஜர் இன்றளவும் அரசியல் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுகிறார். எளிய குடும்பத்தில் பிறந்த காமராஜர், பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை என்றாலும், சிறு வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
கல்விக் கூடங்களுக்குச் செல்லவில்லை என்றாலும், தன்னைத் தானே வளர்த்துக்கொண்டவர் காமராஜர். பத்திரிகைகள், புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தவர். தொடர்ச்சியான ஆர்வத்தில் ஆங்கிலமும் கற்றுக்கொண்டார். கேரளத்தில் இருந்த குறைந்த நாட்களில் மலையாள மொழியைக் கற்ற காமராஜருக்கு தெலுங்கு மொழியும் தெரியும்.
1954 முதல் 1963 வரை 9 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜர், பிற அரசியல் தலைவர்களுக்கு உதாரணமாக ஆட்சி நிர்வாகத்தை நடத்தியவர்; முதல்வராக இருந்தாலும் எளிய வாழ்க்கையை வாழ்ந்தார், ஆடம்பரங்களை முற்றிலும் தவிர்த்தார். தனது ஆட்சிக் காலத்தில் எளிய மக்களின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவரும் திட்டங்களில் தீவிரக் கவனம் செலுத்தினார்.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, தமிழ்நாட்டின் கல்வி, உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்மயமாக்கலில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தார். விவசாயிகள் பயன்பெறவும், நீர்வளத்தைப் பெருக்கவும் மணிமுத்தாறு திட்டம், கீழ்பவானி திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், அமராவதி திட்டம், ஆரணியாறு திட்டம், வைகைத் திட்டம், காவிரி கழிமுக வடிகால் திட்டம், புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைக் கால்வாய்த் திட்டம் போன்ற நதிநீர்த் திட்டங்கள் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டன.
நாட்டை வழிநடத்திச் செல்ல இளைஞர்கள் முன்வர வேண்டும் என்பதில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே 1963இல் தனது முதல்வர் பதவியைத் துறந்தார் காமராஜர். பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் எப்போதும் மக்கள் பணியைத் தொடர்ந்து செய்தார் காமராஜர். நேர்மையும் – உழைப்பும் இரு கண்கள் என வாழ்ந்த காமராஜர், மக்கள் எளிதில் அணுகக் கூடிய தலைவராகவே கடைசி மூச்சுவரை இருந்தார். அதன் காரணமாகவே மக்கள் தலைவர் என்றும் அன்போடு இன்றும் அழைக்கப்படுகிறார்.
ஜூலை 15 – காமராஜர் பிறந்தநாள்