கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்! | Declining Birth Rate on Karur District!
கரூர் மாவட்டத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகை யில் 2024-ம் ஆண்டில் குழந்தை பிறப்பு 5 சதவீதம் குறைந்துள்ளது.
உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டியது. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது உலக மக்கள் தொகை சுமார் 800 கோடியைத் தாண்டியுள்ளது. அதேவேளையில், உலக மக்கள் தொகை இன்னும் சில 10 ஆண்டுகளில் சரியத் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், 2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதுள்ள மக்கள் தொகை குறையாமல் அதே அளவு நீடிப்பதற்கு குழந்தை பிறப்பு விகிதம் 2.10 ஆக இருக்க வேண்டும். ஆனால், குழந்தை பிறப்பு விகிதம் இந்திய அளவில் 1.90 விகிதமாகவும், தமிழகத்தில் 1.40 விகிதமாகவும் உள்ளது.
குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறைவதால் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, சமூக சிக்கல்கள் ஏற்படும் என கருத்து தெரிவித்து வரும் அரசியல் வாதிகள், மத அமைப்பினர், அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வலியுறுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டம் 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது 8.50 லட்சமாக இருந்த மக்கள் தொகை, 2011-ல் 10.80 லட்சமாக அதிகரித்தது.
தற்போது சுமார் 13 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 2001-ல் குழந்தை பிறப்பு 4,201ஆக இருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து 2022-ல் 13,214ஆக அதிகரித்தது. இந்நிலையில், 2023-ல் 13,122 ஆகவும், 2024ல் 12,467 ஆகவும் சரிந்துள்ளது. 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-ம் ஆண்டில் குழந்தை பிறப்பு 5 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து கரூர் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறுகையில், ”தமிழக அளவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வரும் நிலையில், மக்கள் பலரும் தங்களது பொருளாதார நிலை, கல்விக் கட்டணம், மருத்துவ செலவுகள் உள்ளிட்ட காரணங்களால் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வதால் குழந்தை பிறப்பு கணிசமாக குறைந்துள்ளது” என்றனர்.