EBM News Tamil
Leading News Portal in Tamil

உணவுச் சுற்றுலா:  மஸ்கோத் அல்வா | Muscoth halwa special


அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!

அல்வா என்றாலே நெய்யின் மணமும் சுவையும் தூக்கலாக இருக்கும். ஆனால், நெய்யின் ஆதரவின்றி ஓர் அல்வா தயாரிக்கப்படுகிறது என்றால், அது மஸ்கோத் அல்வாதான்.அல்வா என்றாலே நினைவுக்கு வருவது திருநெல்வேலி அல்வாதான். அதே திருநெல்வேலி மாவட்டத்தில்தான் இந்த மஸ்கோத் அல்வாவும் பிரபலம்! திசையன்விளை எனும் சிறு நகரத்தில் விவசாய நிலங்களும் வாழைத் தோப்புகளும் ஊருக்கு அழகு சேர்க்கின்றன. அங்கிருக்கும் முதலூர் எனும் அழகிய கிராமத்தில்தான் மஸ்கோத் அல்வா பிரசித்தம்.

பெயரைக் கேள்விப்பட்டதும் மஸ்கோத் அல்வாவின் பிறப்பிடம் அரபு நாடுகளாக இருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்களால் நம் தென் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் திசையன்விளை மஸ்கோத் அல்வா!

எப்படித் தயாரிக்கிறார்கள்?: எண்ணெய்ப் பசை நிறைந்த தேங்காய்களைத் துருவி, பாலெடுத்து வைத்துக்கொள்கிறார்கள். கோதுமையிலும் பாலெடுத்துக் கொள்கிறார்கள். (இப்போது மைதாவைப் பயன்படுத்தியும் பாலெடுத்துப் பயன்படுத்துகிறார்கள்.)

சர்க்கரையுடன் தேங்காய்ப் பால், கோதுமைப் பாலை ஊற்றி, நன்றாகக் கலக்குகிறார்கள். அடுப்பில் ஏற்றி மெல்லிய தீயில் கொதிக்க வைக்கிறார்கள். நேரம் ஆக ஆக மெலிதான காபி நிறம் அல்வாவுக்குக் கிடைக்கிறது. உடைத்து வைத்த முந்திரிகளை அல்வாவில் போட்டால் மஸ்கோத் அல்வா தயார்.

பால் எடுப்பதற்கும் அதைப் பதத்துக்குக் கொண்டு வருவதற்கும்தான் நேரம் பிடிக்கிறது. மஸ்கோத் அல்வா சரியாக வந்திருக்கிறதா என்று சோதிக்க அவ்வப்போது விரல்களுக்கு இடையில் வைத்து உருட்டிப் பார்க்கிறார்கள். பதத்துக்கு வந்ததும் வாழை இலையில் சுடச்சுட அல்வாவைக் கொடுக்கிறார்கள். அடடா! மஸ்கோத் அல்வாவின் தனித்துவமான சுவைக்குத் தேங்காய்ப் பாலின் சேர்மானம் மிக முக்கியக் காரணம்.

நெய் செய்யும் பணியைத் தேங்காயின் எண்ணெய் எடுத்துக்கொள்கிறது. விரல்களில் பிசுபிசுவென ஒட்டாமல் இருப்பது மஸ்கோத் அல்வாவுக்கான பதம். வீட்டிலேயும் மஸ்கோத் அல்வாவை முயற்சி செய்யலாம். தேங்காய்ப் பால், கோதுமைப் பால், நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் மஸ்கோத் அல்வாவைத் தயாரிக்கலாம். மேலும் மஸ்கோத் அல்வா அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது என்பதால், குறைந்து ஒரு மாதம் வரை வைத்துச் சாப்பிடலாம்.

தேங்காய்ப் பாலின் நன்மைகள்: தேங்காய்ப் பால் சேர்க்கப்படுவதால் மஸ்கோத் அல்வாவுக்கு மருத்துவக் குணங்கள் கூடுகிறது. வயிற்றுப் புண், வாய்ப்புண்களைப் போக்கும் தன்மை தேங்காய்ப் பாலுக்கு உண்டு. வாய் நாற்றத்தைத் தடுக்கவும் தேங்காய்ப் பாலின் சாரங்கள் உதவும். ஊட்டம் குறைந்தவர்களுக்குத் தேங்காய்ப் பால் கலந்த பண்டங்கள் அற்புதமான பலன் அளிக்கும். உடல் மெலிந்தவர்களுக்குத் தேங்காய்ப் பாலை அடிக்கடி கொடுத்து வர, சதைப்பிடிப்பார்கள். தேங்காய்ப் பாலில் உள்ள லாரிக் அமிலம் பல்வேறு மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகிறது.

திசையன்விளையின் பல்வேறு பகுதிகளில் மஸ்கோத் அல்வா கிடைக்கிறது. அதில் தங்கையா மஸ்கோத் அல்வா கடை அங்கு பல பத்தாண்டுகளாக இயங்கி வருகிறது. தொடக்கத்தில் முதலூர் பகுதிகளில் சைக்களில் தொடங்கிய இனிப்பு – கார வியாபாரம், இப்போது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.

திருநெல்வேலி அல்வாவைச் சுவைப்பவர்கள், திசையன்விளை மஸ்கோத் அல்வாவையும் முயற்சி செய்து பாருங்கள். இனி உங்கள் அல்வா பட்டியலில் மஸ்கோத் அல்வாவும் நீக்கமற இடம்பிடிக்கும்!

கட்டுரையாளர், சித்த மருத்துவர்.