EBM News Tamil
Leading News Portal in Tamil

மூட்டுவாத பாதிப்புகளுக்கு நறுமண சிகிச்சையால் தீர்வு: யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி ஆய்வில் தகவல் | Aromatherapy is Solution for Arthritis: Study by the College of Yoga and Naturopathy


மூட்டு வாத பாதிப்புகளுக்கு நறுமண சிகிச்சை மூலம் நல்ல தீர்வு கிடைப்பதாக யோகா – இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மூட்டு வாத பாதிப்புகளை நறுமண சிகிச்சை (அரோமா தெரபி) மூலம் குணப்படுத்துவது குறித்து அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மருத்துவர் எஸ்.மாதேஷ், மருத்துவர் ஒய்.தீபா, ஏ.மூவேந்தன், என்.மணவாளன் ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதன் முடிவுகள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரையில் கூறியிருப்பதாவது:

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு அழற்சியால் உலகம் முழுவதும் 25 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குருத்தெலும்பு, மூட்டு இணைப்பு எலும்புகளில் ஏற்படும் நாள்பட்ட தேய்மானம் மற்றும் உராய்வுகளால் இப்பிரச்னை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இயல்பாக செயல்படவோ, நடமாடவோ முடியாமல் முடக்கிவிடக்கூடிய நோயாக இது உள்ளது.

பொதுவாக, தலை வலி, உடல் வலி, சோர்வு, பதற்றம், தூக்க குறைபாடுகளுக்கு நறுமண சிகிச்சைகள் நல்ல பலன் அளிக்கின்றன. பல்வேறு வகையான தாவரங்களின் பூ, வேர், இலை ஆகியவற்றின் சாரத்தை பிரித்தெடுத்து நறுமண எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன. லெமன்கிராஸ் எனப்படும் எலுமிச்சை புல்லும், கெமோமில் எனப்படும் சாமந்தி வகை பூக்களும் இயற்கையாகவே அதிக மருத்துவ குணம் கொண்டவை. அவற்றின் சாரத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து தனித்துவமான நறுமண எண்ணெயை தயாரித்து, அதை மூட்டு அழற்சி நோயாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, யோகா இயற்கை மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளில் 80 பேருக்கு அத்தகைய சிகிச்சை வழங்க திட்டமிடப்பட்டது. அவர்களில் 50 பேர் சிகிச்சைக்கு தகுதியானவர்களாக இருந்தனர். 40-60 வயதினரில் 38 பெண்கள், 12 ஆண்கள் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எலுமிச்சை புல், சாமந்தி பூ வகை எண்ணெய் தலா 3 மி.லி.யுடன் தேங்காய் எண்ணெய் 15 மி.லி. சேர்த்து ஒவ்வொரு கால் மூட்டிலும் தலா 10 நிமிடம் வீதம் 10 நாட்களுக்கு நறுமண எண்ணெய் மசாஜ் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பயனாக அவர்களது உடல் எடை நிறை (பிஎம்ஐ) குறைந்தது. மூட்டு அழற்சியால் ஏற்பட்ட வலியும் குறைந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதை மேலும் நுட்பமாக அறிந்துகொள்ள, கூடுதல் நோயாளிகளை கொண்டு விரிவான ஆய்வு மேற்கொள்வது அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.