EBM News Tamil
Leading News Portal in Tamil

உடலுக்கு கேடு தராத ‘புரதச் சத்து மாவு’ தயாரிப்பது எப்படி? – ஓர் எளிய வழிகாட்டுதல் | How to Make ‘Protein Flour’ that is Not Harmful to Body? – Simple Guide


ஆண், பெண் என இரு பாலரும் சம அளவில் புரதச் சத்து உணவு உட்கொள்ளலாமா? அல்லது இருவருக்கு உட்கொள்ளும் அளவில் ஏதேனும் குறிப்பிட்ட அளவு உள்ளதா? இறைச்சி வகையான புரதச் சத்துகள் உட்கொள்ளலாமா? அல்லது காய்கறி வகையான புரதச் சத்துகள் உட்கொள்ளலாமா? – இவ்வாறு புரதச் சத்து குறித்து பல கேள்விகள் எழலாம். இதற்கு எளிய விளக்கத்துடன், எளிய முறையில் சரிவிகித ‘புரதச் சத்து மாவு’ தயாரிக்கும் வழிமுறைகளையும் விவரிக்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா.

“புரதச் சத்து என்பது நமது உடலை கட்டமைக்க மிக முக்கிய தேவைகளில் ஒன்று. உடலில் ஏற்படும் காயங்கள் குணமாக புரதச் சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், இது உடலுக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலம். பொதுவாக நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு நபர் ஒரு கிலோவுக்கு 8 கிராம் என்கிற விகிதம் அளவில் புரதச் சத்தை உட்கொள்ள வேண்டும். இது ஒருவரின் உடல் எடையை பொறுத்து உட்கொள்ளும் அளவில் மாற்றம் இருக்கலாம். ஒருவேளை அதிகப்படியான புரதச் சத்து உட்கொள்வது, நமது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் அதிகப்படியான புரதச் சத்துகளை உட்கொள்ள ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, இறைச்சி வகையான புரதச் சத்துகளை ஆண்டு முழுவதும் தினமும் அதிகப்படியான உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதன் மூலம், நாளடைவில் நமக்கு இதய நோய், ரத்த அழுத்தம் அதிகரிப்பது, சிறுநீரக பிரச்சினை, கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இறைச்சி வகைகளில்தான் அதிகப்படியான புரதச் சத்து உள்ளது. அதற்கு பதிலாக காய்கறிகளை உட்கொள்ளலாமா? இறைச்சி உண்பதை தவிர்க்கலாமா என்று பல கேள்விகள் எழுகின்றன. எந்தெந்த உணவுகள் மூலம் சரிவிகித புரதச் சத்துகளை பெறலாம் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.

மீன்கள்: புரதச் சத்துகளை குறைந்த அளவில் பெற மீன்கள் மிகவும் நல்ல உணவு. வாரத்தில் இரண்டு நாட்கள் மீன்களை உண்ணலாம். இறைச்சியை தவிர்த்து புரதச் சத்து உள்ள காய்கறிகள் உட்கொள்வது மிகவும் நல்லது.

வீட்டிலேயே ‘புரதச் சத்து மாவு’ செய்வது எப்படி? – இன்றையச் சூழலில், செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் புரதச் சத்து மாவுகள் உட்கொள்தன் மூலம் உடலில் புரதச் சத்து அதீதமாகி, உடல் உபாதைகள் ஏற்படும். இதனை எளிமைப்படுத்த நாம் வீட்டிலையே பாரம்பரியமான முறையில் புரதச் சத்து மாவு தயார் செய்யலாம். இயற்கையான முறையில் கிடைக்கும் தானியங்கள் மூலம் தயாரிக்கக் கூடிய புரதச் சத்து மாவு நமது உடல் ஆரோக்கியத்தை மேன்மைப்படுத்த உதவும்.

சணல் விதைகள் (Hemp Seeds). இது நமது ஆடை, நூல் தயாரிக்க பெரிதும் பயன்படுகிறது. இருப்பினும் இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் அதிகப்படியான அமினோ அமிலம் (Neuraminic Acid) உள்ளது. இது நமது உடலுக்கு தேவையான புரதச் சத்துகளை வழங்குகிறது.

ஒரு கப் சணல் விதைகள், அரை கப் சியா விதைகள், அரை கப் ஆளி விதைகள், கால் கப் பூசணி விதைகள் ஆகிய நான்கையும் வானலியில் வறுத்து, அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளலாம்.

சணல் விதைகளை கொண்டு செய்யப்பட்ட இந்தப் பொடியை தினசரி பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இந்தப் பொடியை தேன் மற்றும் ஜூஸ்களில் கலந்தும் குடிக்கலாம். குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் பொடி கலந்து ஜூஸுடன் உலர் பழங்கள் கலந்து கொடுப்பது என்பது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நாள் ஒன்றுக்கு ஒருவேளை 100 கிராம் பொடியை நீரில் கலந்து குடிக்கலாம். இதில், நமது உடக்கு தேவையான 20 கிராம் புரதச் சத்து கிடைக்கும். இது இதய நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

சணல் விதைகளில் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இதில் நார்ச் சத்துகள் உள்ளன. இது நமது செரிமானத்தை எளிமைப்படுத்தி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. அதனால், மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது.

அதிகப்படியான புரதச் சத்து உண்ணும்போது, உடலில் வெப்ப நிலை அதிகரித்து மலச்சிக்கலை ஏற்படுத்தும். ஆனால், இந்தப் பொடியில் சேர்த்துள்ள பூசணி விதைகள் நமது குடலின் சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தையும் மேன்மைப்படுத்த உதவுகிறது. அதேபோல், இந்தப் பொடியில் உள்ள சியா விதைகள் நமது உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.

சியா விதைகளை தனியாக வறுத்து அரைத்தும் பொடி செய்யலாம். நன்கு கொதிக்க வைக்கப்பட்ட பசும் பாலில் ஒரு ஸ்பூன் சியா விதைகளின் பொடியுடன் சிறிதளவு நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து குடித்தால் நமக்கு தேவையான புரதச் சத்து கிடைக்கும். குழந்தைகளுக்கு தேன் கலந்தும், பெரியவர்களுக்கு நாட்டு சர்க்கரை கலந்தும் குடிக்கலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்களும் இதனை தாராலமாக குடிக்கலாம். ஏன் என்றால், சியா விதைகளின் பொடியானது, நமது ரத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் ரத்த குழாயில் ஏற்படக்கூடிய அடைப்புகளை சரி செய்வதுடன், ரத்த அழுத்தத்தையும், கொடஸ்ட்ராலையும் பராமரிக்க உதவுகிறது.