சர்க்கரை நோயில் இருந்து ‘விடுபட’ செய்ய வேண்டியது என்ன? | What should done to control diabetes doctor explained
உலக மருத்துவர்கள் தினம் கோவை ராம்நகரில் உள்ள கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவரும், மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் பாலமுருகன் பேசியது:
‘சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியுமா என்றும், அந்த நோய் வந்துவிட்டால், அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் மக்களிடம் இருக்கின்றன. சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், தற்காலிகமாக அந்த நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. சர்க்கரை நோயில் இருந்து தற்காலிகமாக மீள்வது என்பது, குறைந்தது மூன்று மாதங்களுக்கு எந்தவித மருந்துகளும் எடுக்காவிட்டாலும், அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கக் கூடாது.
பெரும்பாலும் சர்க்கரை நோய், உடல் எடை அதிகம் இருப்பவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களை எளிதில் பாதிக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு மணிநேரம் தூங்க வேண்டும். இல்லையெனில், மன அழுத்தம் அதிகரித்து, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஏற்கெனவே, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகளை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், உடல் எடை அதிகமாக இருப்போர், தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அவர்கள் நடைபயிற்சியில் ஈடுபடுவதும் அவசியம். மன அழுத்தம், வேலைப் பளு ஆகியவற்றால் பாதிக்கப்படுவோர், மருத்துவரின் ஆலோசனைப்படி, மன அழுத்தத்தை போக்கும் கவுன்சிலிங் பெற வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை தவிர்த்து விரதம் இருக்கின்றனர். இத்தகைய செயல்பாடு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்பது வி்ஞ்ஞான ரீதியில் இன்னும் நிருப்பிக்கப்படவில்லை. சர்க்கரை நோய்க்கான மருத்துகளை எடுத்துக் கொள்ளும்போது, விரதம் இருந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் அபாயம் நிலவுகிறது.
இளம்வயதினர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணியாக இருப்பது துரித உணவுகள்தான். ஒவ்வொரு தெருவிலும், இத்தகைய துரித உணவு கடைகள் காளான்கள் போல் முளைத்துவிட்டன. தற்போதுள்ள சில மொபைல் ஆப்கள் மூலமாக 24 மணிநேரமும் உணவை வீட்டுக்கே வரவழைத்து உண்ண முடிகிறது. இதனால், உடலின் செயல்பாடு பெருமளவில் குறைந்துவிடுகிறது. இதுவும் சர்க்கரை நோய் அதிகரிக்க முக்கியக் காரணமாகிறது.
நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று, சர்க்கரை நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழலாம்” என்றார்.