EBM News Tamil
Leading News Portal in Tamil

7 கண்டங்களில் உள்ள உயரமான மலைகளில் ஏறி முத்தமிழ்ச்செல்வி சாதனை! | Muthamil Selvi’s Achievement of Climbing the Highest Mountains on 7 Continents!


எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த நாராயணன் – மூர்த்தியம்மாள் தம்பதியின் மகள் முத்தமிழ்ச்செல்வி (33). கடலூரில் படித்து முடித்து, திருமணமாகி தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும், ஜப்பானிய மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

2021ம் ஆண்டு மார்ச் 7ம் தேதியில் மகளிர் தினத்தையொட்டி திருப்பெரும்புதூர் அருகே 155 அடி உயர மலை உச்சியிலிருந்து கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு 58 விநாடிகளில் கீழே இறங்கி சாதனை படைத்தார்.

பின்னர், 2021ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியில் இமாச்சல பிரதேசத்தின் குலாங் கிராமத்தின் 165 அடி உயர மலை உச்சியிலிருந்து 55 விநாடிகளில் இறங்கினார். 2022ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியில் சென்னை வண்டலூர் அருகே உள்ள மண்ணிவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் குதிரைமீது அமர்ந்து இலக்கில் துல்லியமாக 1,389 அம்புகள் எய்தும் சாதனையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து, 2023 மே மாதம் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி, இச்சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனையை படைத்தார். அதைத்தொடர்ந்து அனைத்து கண்டங்களிலும் உள்ள உயர்ந்த மலைகளில் ஏறுவதை லட்சியமாகக் கொண்டு தீவிரமாக முயற்சித்தார். அதன்படி தற்போது உலகில் உள்ள 7 கண்டங்களின் மலை உச்சிகளை ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய அளவில் மிகவும் குறைந்த காலத்துக்குள், அதாவது 2 ஆண்டுகளுக்குள் இச்சாதனையை படைத்த பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முத்தமிழ்ச்செல்வி கூறுகையில், ஆசியா கண்டத்தில் உள்ள மிக உயர்ந்த சிகரமான எவரஸ்ட் சிகரத்தில் (8,848 மீட்டர் உயரம்) 2023 மே மாதம் ஏறியதைத் தொடர்ந்து மற்ற கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறுவதில் ஆர்வம் பிறந்தது. அதற்காக கடுமையாக பயிற்சி எடுத்தேன்.

ஐரோப்பாவின் மிக உயர்ந்த எல்புரூஸ் மலையை (5,642 மீட்டர் உயரம்) 2023 ஜூலையிலும், ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த கிலிமஞ்சாரோ மலையை (5,895 மீட்டர் உயரம்) 2023 செப்டம்பரிலும், தென் அமெரிக்காவின் மிக உயர்ந்த அகொன்காகுவா மலையை (6,962 மீட்டர் உயரம்) 2024 பிப்ரவரியிலும் ஏறினேன்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மிக உயர்ந்த மலையான 2,228 மீட்டர் உயரம் உள்ள கோஸ்சியஸ்கோவை 2024 மார்ச்சிலும், அண்டார்டிகாவின் மிக உயர்ந்த மலையான 4,892 மீட்டர் உயரம் உள்ள வின்சன் மலையை 2024 டிசம்பர் மாதத்திலும், வட அமெரிக்காவின் மிக உயர்ந்த மலையான 6,190 மீட்டர் உயரம் உள்ள டெனாலி மலையை கடந்த ஜூன் 16-ம் தேதியிலும் ஏறினேன் என்று கூறினார்.