12 மலைக் கிராமங்களில் மலைவாழ் குழந்தைகள் கல்விக்கு ‘ஒளியேற்றும்’ மகளிர்! | Education for 12 hill villages children in hosur
ஓசூர்: தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் மலைவாழ் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்தும் பணியில் ஓசூரைச் சேர்ந்த மகளிர் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம் உள்ளிட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.
இக்கிராம மக்கள் பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ளனர். மேலும், இக்கிராமங்களில், சாலை, குடிநீர், மின் விளக்கு, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், இக்கிராமங்களில் கல்வி, மருத்துவம் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இக்கிராமங்கள் மாவட்டத்தின் கடைக்கோடியில் இருப்பதாலும், வனங்கள், மலைகள் சூழ்ந்த பகுதியாக இருப்பதாலும், அரசின் கவனமும் இக்கிராம மக்களுக்கு கிடைப்பதில்லை.
குறிப்பாக, இங்கு வேலைவாய்ப்பு இல்லாததால், நகரப் பகுதிக்கு தம்பதிகள் புலம்பெயர்வதால் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆண்டில் பாதி நாட்கள் வேலைவாய்ப்புக்காக நகரப்பகுதிக்குச் செல்வதால், கிராமத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி 18 வயதுக்கு முன்னரே உறவு முறையில் திருமணத்தை நடத்தி வைப்பதும் அதிகரித்துள்ளது. உள்ளூரில் இருக்கும் நடுநிலைப் பள்ளி வரை கல்வி பயிலும் குழந்தைகள் உயர்கல்விக்கு வெளியூர் செல்ல வேண்டியது உள்ளதால் கல்வி இடைநிற்றல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஓசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் 21 மகளிர் ஒருங்கிணைந்து, ‘அன்பு செய்வோம்’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கிக் கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதி குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைக் கண்டறிந்து அவர்கள் உயர்கல்வியைத் தொடரவும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்புகளை நடத்துவதோடு, குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு செய்யும் சேவை யிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் கவுரி குருநாதன் கூறியதாவது: மலைக்கிராமங்களில் பள்ளி இடைநிற்றலைத் தடுக்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. ஆனால், மலைக் கிராம மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், பொருளாதார வசதியில்லாததாலும், தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை மட்டும் கொடுத்து வருகின்றனர். நகரப் பகுதிக்குக் கூலி வேலைக்குச் செல்வதால், குழந்தைகளை வீட்டுப் பணியிலும், தங்களுடன் அழைத்துச் செல்கின்றனர். மேலும், பல்வேறு காரணங்களால் குழந்தைத் திருமணமும் அதிகரித்துள்ளது.
இவற்றைத் தடுக்கவும், மலைவாழ் மக்களிடம் கல்வி, குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த, ‘அன்பு செய்வோம்’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கி பணி செய்து வருகிறோம். எங்கள் உறுப்பினர்கள் வழங்கும் நிதி மூலம் இப்பணிக்கு தேவையான செலவினங்களை பூர்த்தி செய்து வருகிறோம்.
இந்தாண்டு, 12 கிராமங்களைத் தேர்வு செய்து, குழந்தைகளுக்குத் தேவையான கல்வி உபகரணங்களை இலவசமாக வழங்கி, மாலை நேர வகுப்பு நடத்தி வருகிறோம். இப்பணிக்காக மலைக் கிராமத்தில் படித்த பெண்களுக்குச் சம்பளம் கொடுத்து, நியமித்துள்ளோம். இதேபோல, பள்ளி இடைநிற்றல் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களது பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உயர்கல்வியைத் தொடரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.