மணாலி பயணிகளுக்கான சொர்க்கபுரி! பனி போர்த்திய மலைகளும் பனி உருகியோடும் வெள்ளி ஆறுகளும் ஆர்ப்பரிக்கும் சிற்றருவிகளும் கண்களுக்கான பெருவிருந்து! மணாலியின் பாரம்பரிய வீடுகளும் மக்களின் வாழ்க்கை முறையும் புதுமையான அனுபவத்தைக் கொடுத்தன.
மணாலியிலிருந்து சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சிறிய மலைக் கிராமம். அங்கிருக்கும் பல்வேறு இயற்கையான வனப்புகளை ரசித்து முடிக்க பசி உணர்வு மேலோங்கி இருந்தது. குளிர்ப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்யும் போது, சூடாக ஏதாவது உணவோ தேநீரோ கிடைக்குமா என மனம் ஏங்கும்.
அங்கிருக்கும் புகழ்பெற்ற அருவிக்கு அருகிலேயே பாரம்பரிய மதிய உணவு பரிமாறும் மலைக் கிராமத்து உணவகத்துக்குச் சென்றோம். மரத்தாலும் கற்களாலும் இணைத்துக் கட்டப்பட்டிருந்தது அது. உணவுக்காக எரிந்துகொண்டிருந்த அடுப்புகளும் உள்ளிருக்கும் வெப்பமும் குளிருக்குத் தேவைப்படும் இதத்தைக் கொடுத்தன.
எப்போதுமே விறகடுப்பு எரிந்துகொண்டிருக்கிறது. அதற்கு மேல் மிகப் பெரிய தகரம். சமைத்து முடித்த உணவுப் பொருட்களை அந்த தகரத்தின் மீது வைத்திருக்கிறார்கள். சமைக்க குக்கர் பயன்படுத்துகிறார்கள். சாதம், சாம்பார், பொரியல் அனைத்தும் மிதமான வெப்பத்தில் இருக்கிறது. இதனால் குளிருக்கு ஏற்ப சுடச் சுட சாதம் பரிமாற ஏதுவாக இருக்கிறது.
தந்தூரி ரொட்டி: ரொட்டியைச் சுடும் முறையில் அங்கு மிகப் பெரும் வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது. அனல் கங்குகளோடு எரிந்துகொண்டிருக்கும் விறகடுப்பில் நேரடியாக ரொட்டியைச் சுட்டுக் கொடுக்கிறார்கள். நெருப்பில் ரொட்டியை முன்னும் பின்னும் திருப்பிப் பதமாகச் சுடுகிறார்கள். தோசைக் கல்லின் உதவியெல்லாம் கிடையாது. நெருப்பின் வாசனையோடு தந்தூரி ஸ்டைலில் ரொட்டியைச் சாப்பிடுவது வித்தியாசமாக இருந்தது.
ஸ்பெஷல் சிவப்பரிசி
சிவப்பரிசி சாதம், ரொட்டி, மலையில் விளையும் காய்களில் பொரியல், சாம்பார், தொட்டுக்கொள்ள சில சட்னி ரகங்கள் எனப் பாரம்பரிய மதிய உணவு மேசையில் இடம்பிடித்தது. அருவியின் மெல்லிசை இதம் கொடுக்க, உணவைச் சுவைக்கத் தொடங்கினோம். இமாச்சலத்தின் மலைச் சரிவுகளில் விளையும் சிவப்பரிசிதான் மதிய உணவின் சிறப்பு. அதிகளவில் நார்ச்சத்து, தாதுப் பொருட்கள் மற்றும் இரும்புச் சத்தை உள்ளடக்கிய சிவப்பரிசி இது! எதிர்-ஆக்ஸிகரணி பொருட்களைக் கொண்டிருக்கும் இந்த அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவதால் உடலுக்கு ஊட்டம் கிடைக்கும். சிவப்பரிசியிலிருந்து தயாரிக்கப்படும் கஞ்சியைப் பாலுட்டும் தாய்மார்களுக்கு ஊட்ட உணவாக வழங்குகின்றனர். சிவப்பரிசியை முதன்மையாக வைத்துப் பல்வேறு பான வகைகளும் அங்கு தயாரிக்கப்படுகின்றன.
இந்த மலைக் கிராமத்துச் சிவப்பரிசிக்குக் கிளைசிமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ரொட்டியை முதலில் சாப்பிட்ட பிறகு, சிவப்பரிசியில் சாம்பாரோ சட்னியோ சேத்துக்கொண்டு சாப்பிட அருமையாகப் பசியாறியது.
மலைப் பிரதேசங்களில் உடலுக்குத் தேவைப்படும் லேசான வெப்பத்தைக் கொடுப்பதோடு, உடலுக்குத் தேவைப்படும் நுண்ணூட்டங்களையும் இந்த உணவு முறை அவர்களுக்கு வழங்குகிறது. பன்மயம் மிக்க நம் நாட்டில், உணவுப் பன்மயமும் அதிகம்! வெவ்வேறு சூழலுக்கு ஏற்ப, வெவ்வேறு உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதும் நோயின்றி வாழ்வதற்கான அடிப்படை.
மணாலிக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, சிவப்பரிசி சாதத்தைத் தவறவிடாதீர்கள்.
– கட்டுரையாளர், சித்த மருத்துவர்.