சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த தண்ணீர் + மஞ்சள் ரீல்ஸ் பதிவுகள்! | This Turmeric Flashlight video is viral in the Internet
தற்போது இணைய உலகை ஆட்டிப் படைப்பது ரீல்ஸ்கள் தான். சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விஷயங்கள் ட்ரெண்டாகி வருகின்றன. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்களில் புதிய புதிய அப்டேட்கள் அவ்வப்போது வைரலாகிக் கொண்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பது இந்த தண்ணீர் – மஞ்சள் ரீல்ஸ் வீடியோக்கள்தான்.
குறிப்பாக இருண்ட இடத்தில் செல்போன் டார்ச்சினை ஆன் செய்து வைத்துக்கொண்டு, எதிரே ஒரு கண்ணாடி கிளாஸை வைத்து, அதில் முதலில் தண்ணீரை நிரப்புகிறார்கள். அதன் பின்னர் ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் தூளை போடுகிறார்கள். அப்போது அது வித்தியாசமான ஜொலிக்கும் நிறத்தை கொடுக்கிறது. பின்னணியில், ஷாரூக் – தீபிகாவின் ‘ஓம் ஷாந்தி ஓம்’ பாடல் இசை. பார்ப்பதற்கும் கியூட்டாக இருக்கிறது. இதை குழந்தைகள் வியப்போடு பார்க்கும் பதிவுகளும் ஈர்க்கின்றன.
அதில், ஒரு குழந்தையின் அழகான ரியாக்ஷன் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கையில் மஞ்சளுடன் தான் சுற்றி வருகிறார்கள். இந்த காணொளி ஜூன் 15 அன்று ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.
இதன் பின்னணியில் உள்ள அறிவியலைப் பார்த்தால், மஞ்சள், ஒளியுடன் வினைபுரிந்து இத்தகைய “ஒளிரும் விளைவு” ஏற்படுகிறது. மஞ்சளில் குர்குமின் (curcumin) என்ற கலவை உள்ளது. இதனால் இருட்டான அறையில், டார்ச் லைட்டில் இருந்து வரும் ஒளி, மஞ்சளில் ஊடுருவி இப்படியான ஒளியை தருவதாக கூறப்படுகிறது.
நெட்டிசன் ஒருவர் ‘மஞ்சள் தூளின் விலை உயர்ந்துள்ளதாகக் கேள்விப்பட்டேன்’ என்றும், மற்றொருவர் ‘சிறிய விஷயங்கள் மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றன,” என்றும் தெரிவித்துள்ளனர். பலரும் இந்த வீடியோவைப் பார்த்து “சிம்பிள் அண்ட் வாவ்” என்று கூறி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.