உடலுக்கு தேவையான புரோட்டீன் எளிதில் கிடைக்க என்ன செய்யலாம்? | What can we do to Easily get the Protein Our Body Needs?
நம் உடல் நலனுக்கு புரோட்டீன் மிக மிக அவசியம். தினமும் உடலுக்குத் தேவையான புரதச் சத்துக்கு எளிய முறையை விவரிக்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா.
“மூக்கடலை (வெள்ளை, கருப்பு இரண்டுமே), கருப்பு உளுந்து மூலம் நமக்குத் தேவையான புரதச் சத்து கிடைக்கும் இவை, பல நாட்கள் இருக்க கூடிய நோய்கள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் தீர்வதற்கு உதவும். மூக்கடலையை நன்கு ஊரவைத்து, வேக வைத்துக் கொள்ளலாம். அதனுடன், உலர் பழங்கள் சேர்த்து சாப்பிடலாம். இதேவே, கருப்பு உளுந்தாக இருந்தால், அதனை ஊரவைத்து, வேக வைத்து, பின்னர் அதனுடன் பேரிச்சம் பழங்கள் மற்றும் துருவிய தேங்காயுடம் சேர்த்து சாப்பிடலாம்.
அல்லது மூக்கடலையுடன் புதினா சட்னி செய்து, வேர்க்கடலை மற்றும் அரிசி ஆகியவற்றை வருத்து பொடி செய்து சாலட் மாதிரி கலந்து சுவையாகவும் செய்து சாப்பிடலாம். இதனுடன், நருக்கிய கேரட், குடை மிளகாய், புரோக்கோலி (அல்லது) கோஸ் ஆகியவற்றை வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வதக்கி வேக வைத்த மூக்கடலை அல்லது கருப்பு உளுந்து அகியவற்றையும் சேர்த்து கலந்து கொள்ளலாம். மேலும், சுவைக்காக சிறிது அளவு மிளகு, உப்பு, இஞ்சி சேர்த்து சாப்பிடலாம். இவை சிறந்த காலை உணவாகவும் இருக்கும். அதேநேரத்தில் உடலுக்கு தேவையான புரோட்டீன் சத்துக்கள் பராமரிக்கப்படுகிறது.
புத்துணர்வூட்டும் விதைகள்: விதைகளை காலை நேரத்தில் எலுமிச்சை பழச் சாற்றுடன் உட்கொள்வது நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது. ஒரு டம்ளர் தண்ணீரில் கால் ஸ்பூன் அளவுக்கு சப்ஜா விதைகளை ஊரவைத்து, சிறிதளவு எலுமிச்சை பழச் சாறு சேர்த்து, அதன் உடன் ஒரு சிட்டிகை எப்சம் உப்பு, நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து குடித்தால் புத்துணர்ச்சியாக இருக்கும். இதனுடன் பூசணி விதை, ஆலிவ் விதை, சூரிய காந்தி விதையை சேர்த்துக்கொள்ளலாம். விதைகளில் இருக்கக் கூடிய ஆன்டியாக்சிடன்டுகள் ரத்த நாளங்களை சுத்திகரிக்க உதவுகிறது. எதேனும் அடைப்புகள் இருந்தால் அதனை நீக்கி உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.