EBM News Tamil
Leading News Portal in Tamil

‘இரவில் ரீல்ஸ் பார்ப்பதால் பித்தம் அதிகரிப்பு’ – சித்த மருத்துவர் சிவராமன் அலர்ட் | ‘Watching Reels at Night Causes Increased Bile Production’ – Siddha Doctor Siva Raman Alert


ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, உடல்நலனுக்கு சிறந்த உணவும், மன நலனுக்கு யோகாவும் அவசியம் என்று மருத்துவர் கு.சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆரோக்யா சித்த மருத்துவமனையின் மயிலாப்பூர் கிளை சார்பில் ‘யோகாவும் உடல்நலமும்’ என்ற கருத்தரங்கம், பாரதிய வித்யா பவனில் நேற்று நடைபெற்றது. இதில் ஆரோக்யா மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் கு.சிவராமன், மருத்துவ மனையின் மயிலாப்பூர் கிளை மருத்துவர் பிரிய தர்ஷினி, உடல் நலத்துக்கான யோகா பயிற்சி நிபுணர் மருத்துவர் வெற்றி வேந்தன் ஆகியோர் பங்கேற்று யோகா, பிராணாயாமம் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். அவர்கள் பேசியதாவது:

கு.சிவராமன்: தூக்கம் குறைவதுதான் பல சிக்கல்களுக்கு காரணம். இரவில் ரீல்ஸ் பார்த்து பித்தத்தை அதிகரிக்க செய்கிறோம். இது நம்மை உளவியல் நோயாளியாக மாற்றுகிறது. இதற்கு பிராணாயாமம் அவசியம். தொற்றா நோய்களை தடுக்க போதிய புரதம் மூலம் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க வேண்டும். சைவத்தில் சோயா, பன்னீர், சுண்டல் எடுத்துக் கொள்ளலாம்.

சுண்டலால் வாயு தொல்லை வரும் என்பவர்கள் இஞ்சி, சீரக தூள் பயன்படுத்தலாம். வெள்ளை சர்க்கரை எனும் விஷத்தை தவிர்க்க வேண்டும். இனிப்பு ருசிக்கு பழங்கள் சாப்பிடலாம். இளம் வயதினரிடம் அதிகரித்துள்ள புற்றுநோயை கட்டுப்படுத்த, குப்பை உணவுகளை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே உப்பை குறைக்க வேண்டும்.

வாழைப்பூ, கருவேப்பிலை, பாகற்காய், நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்ற கசப்பு, துவர்ப்பு காய்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். புளிப்பு, காரம் மிதமாக சேர்க்கலாம். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, உடல்நலனுக்கு சிறந்த உணவும், மன நலனுக்கு யோகாவும் அவசியம்.

வெற்றிவேந்தன்: மன அழுத்தத்தால் உருவாகும் தொற்றா நோய்களுக்கு, சிகிச்சைகளுடன் யோகா, பிராணாயாமமும் அவசியம். யோகா தற்போது ‘தெரபி’ எனும் அடுத்த நிலையை அடைந்துவிட்டது. அதன்படி, நோய்களின் தன்மையை தீவிரமாக ஆராய்ந்து, நோயாளிகளுக்கு தனித்துவமான யோகா முறை (PYT) பயிற்றுவிக்கப்படுகிறது. நாள்தோறும் 15 நிமிடங்கள் யோகாவுக்கு ஒதுக்கினால் போதும். உணவு, உடற்பயிற்சி, உறக்கம், உறவுகள் ஆகிய 4 ‘உ’க்களை சீராக வைத்தால் சிறப்பாக வாழலாம். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இசைக்கவி ரமணன், ஆரோக்யா மருத்துவமனை செயல் இயக்குநர் ராஜலட்சுமி சிவராமன், மருத்துவ இயக்குநர் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நாடி பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இயற்கை உணவு, மூலிகை தேநீர் வழங்கப்பட்டது.