‘ரயிலின் ஒலிகள்’ – ரயிலில் மனைவிக்கு நகப்பூச்சு பூசி அழகு பார்த்த சீனியர் சிட்டிசன்! | Senior citizen decorates his wife nails with nail polish on moving train
ஓடும் ரயிலில் தன் மனைவியின் கைவிரல்களில் நகப்பூச்சு பூசி, அலங்கரித்து, அழகு பார்த்துள்ளார் மூத்த வயது நபர் ஒருவர். ரயிலுக்குள் தங்கள் அன்பை பகிர்ந்து மகிழ்ந்த இந்த மூத்த வயது தம்பதியரின் கியூட் வீடியோ சமூக வலைதளத்தில் வீடியோவாக பரவி வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இணைய வெளியில் தினந்தோறும் கோடிக்கணக்கான பதிவுகள் பதிவு செய்யப்படுகிறது. அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்று ஹிட் அடிக்கிறது. அந்த ஹிட் அடித்த பதிவுகளில் ஒன்றாக இணைந்துள்ளது இந்த வீடியோ பதிவு. சுமார் 20+ விநாடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோ பதிவை ரோஹன் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அந்த மூத்த வயது நபர், மனைவியின் விரல்களில் நகப்பூச்சு பூச, அதை சிரித்தபடி அமைதியாக ஏற்றுக்கொள்கிறார் அவரது மனைவி.
‘வயதானால் காதல் இன்னும் ஆழமடைகிறது’ என்ற கேப்ஷன் உடன் இந்த வீடியோவை ரோஹன் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ‘இன்று இணையவெளியில் காணக்கிடைத்த மிக அழகான விஷயம் இது’ என தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வீடியோவில் திருமண பந்தம் குறித்த கருத்துகளையும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். ‘போன்கள் அதிகம் பயன்பாட்டில் இல்லாத காலத்தை சேர்ந்த தலைமுறையினரின் காதல் தருணம்’, ‘இது நீண்ட பயணம். அதனால் ஆழ யோசித்து முடிவு எடுங்கள்’, ‘காதலின் வாசம் இப்படி இருக்கும் என்றால்; அதற்கு நான் காத்திருக்க தயார்’ என நெட்டிசன்கள் சிலர் கருத்தாக கமெண்ட் செய்துள்ளனர்.