EBM News Tamil
Leading News Portal in Tamil

COVID-19 JN.1 variant: கரோனா தொற்று அறிகுறிகள் முதல் அறிய வேண்டிய தகவல்கள் வரை! | COVID-19 JN.1 Variant Explained


கோவை: “தற்போது வேகமாக பரவி வரும் ஜெஎன்.1 என்ற கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளுக்கும் அவசியமில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம்” என குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய குழந்தை நல மருத்துவர் சங்கம் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு) தலைவர் டாக்டர். கே.ராஜேந்திரன் கூறியது: “நாட்டின் பல பகுதிகளில் தற்போது ஜெஎன்.1 என்ற கரோனா வைரஸ் புதிய வகை வேகமாக பரவி வருகிறது. இது ‘ஓமிக்ரான்’ வகையின் துணை உருவான வைரஸாகும். தற்போது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பொதுவான தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இருப்பினும் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஜெஎன்.1 என்பது கரோனா வைரஸ் (ஓமிக்ரான்) வகையின் மாற்றம். இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இருந்தபோதும் பலருக்கு இவை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பரவல் திறன் அதிகமாக இருந்தாலும், தீவிர தன்மை குறைவாகவே உள்ளது.

அறிகுறிகள்: சாதாரண காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கடைப்பு, சளி, வலிப்பு போன்றவையாகும். முதியவர்கள் (60 வயதுக்கு மேற்பட்டோர்), நீண்ட கால நோய்கள் (உயிரணு குறைபாடு, இதய நோய், சிறுநீரக, கல்லீரல் நோய்) உள்ளவர்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆபத்து அதிகம் உள்ளவர்களாக கருதப்படுகின்றனர்.

குழந்தைகள் மற்றும் இளம்வயதினர் பெரும்பாலும் நன்றாக மீண்டு விடுகிறார்கள். இந்த வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை மூட தேவையில்லை. மேலும் கடுமையான பொதுசுகாதார நடவடிக்கைகளுக்கும் அவசியமில்லை. எனவே பெற்றோர் அச்சமின்றி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம். பள்ளிகளில், மாணவர்களுக்கு சுத்தமான கைகழுவும் பழக்கத்தை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.  சிறந்த காற்றோட்டமான வசதி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

டாக்டர். கே. ராஜேந்திரன்

அவசியம் என்றால் மட்டும் முகக்கவசம் அணிந்தால் போதும். நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும். தற்போது இந்தியாவில் ஜெஎன்.1 வைரஸுக்கு எதிரான புதிய எம்ஆர்என்ஏ வகை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கிடைக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் உடல் நலக்குறைவு உள்ளோர் மருத்துவரிடம் அணுகி இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம்.பழைய வகை கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தற்போது வழங்கப்படுவதில்லை.

மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே தடுப்பூசி திட்டமிட வேண்டும். ஜெஎன்.1 வைரஸ் பரவல் பருவ நிலை சார்ந்த ஒரு சிறிய தொற்று அலையாக இருக்கலாம்.சில வாரங்களில் இயல்பு நிலைக்கு திரும்பும் என கருதப்படுகிறது. நாட்டின் மருத்துவ கட்டமைப்பு இதன் தாக்கத்தை கையாளக்கூடிய நிலையில் உள்ளது. பீதி அடைய தேவையில்லை. தற்காப்பு முறைகளை கடைபிடித்தால், பள்ளி மற்றும் பொது வாழ்க்கை வழக்கம் போல் தொடரலாம்,” என்று அவர் கூறினார்.