EBM News Tamil
Leading News Portal in Tamil

பனை கனவுத் திருவிழா – விழுப்புரத்தில் கண்களுக்கு விருந்து படைத்த ‘பாரம்பரியம்’ | Palm Festival in Villupuram Traditional feast for the eyes


விழுப்புரம்: தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4-ம் ஆண்டு ஆறாம் தினை பனை கனவுத் திருவிழா விழுப்புரம் அடுத்த நரசிங்கனூர் கிராமம் பனங்காடு என்ற இடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். பனைக்கு மாபெரும் படையர் ஊர்வலம் நடைபெற்றது. மாரியம்மன் கோயில் தெருவில் இருந்து புறப்பட்டு, விழா நடைபெறும் பனங்காடு பகுதியை வந்தடைந்தது. பனையில் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கள் உள்ளிட்டவற்றை பெண்கள் பானையில் சுமந்து வந்தனர். பின்னர், பனங்காடு என்ற இடத்தில் பனைமரத்தின் முன்பு வைத்து படையலிட்டு வழிபட்டதும், பனையேறிகள் அணிவகுப்பு நடைபெற்றது.

அதன்பிறகு நடைபெற்ற கருத்தரங்கத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கள் இயக்கத் தலைவர் நல்லசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது அவர்கள், பனை மூலம் செய்யப்படும் உணவு உள்ளிட்ட பொருட்களை பட்டியலிட்டும், கள் இறக்கி விற்பனை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். பனை பொருட்களில் தயாரிக்கப்பட்ட தொப்பி உள்ளிட்ட கைவினை பொருட்கள் மற்றும் உணவு பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது.

விழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், நாடகம், பாவை கூத்து, சிலம்பம், மல்லர் கம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் திருச்சி, சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பனையேறிகள் பங்கேற்றனர். தொழில்முறையாக இருப்பவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல் நுங்கு திண்ணும் போட்டி, மரபு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. இறுதியாக, மாவொளி (கார்த்தீ) சுற்றும் நிகழ்வு நடைபெற்றது. பலரும் ஓரே நேரத்தில் மாவொளி சுற்றினர். இதற்கிடையில் பனை மரத்தின் மீது ஏறி அமர்ந்து, விளை நிலங்கள் சூழ்ந்த பகுதிகளை பார்த்து ரசித்தனர். பனை கனவுத் திருவிழாவை குக்கிராம மக்கள் முதல் வெளிநாட்டினர் வரை என பலரும் கண்டு ரசித்தனர்.

தாய்ப்பாலுக்கு இணையானது – சீமான்: இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது: “நம் முன்னோர்கள் பனையை வளர்த்தவர்கள். இப்போது பனையை அழித்துவிட்டு, பாசன கால்வாய்களின் இருபுறமும் சிமென்ட் கலவை தடுப்பு அமைக்கின்றனர், பனையின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள். நம் விளை பொருட்களுக்கு நாம் விலையை தீர்மானிக்க முடியாது. வேளாண் குடிமகன் இறந்தால், மனித சமூகம் வாழ முடியாது. கருப்பட்டியும், கைக்குத்தல் அரிசியும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு எதிரானது. மரபணு மாற்றம் மூலமாக அயல்நாட்டினர் உயிரியல் போர் தொடுத்துள்ளனர்.

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யாரும் இல்லை. இதற்கு காரணம், ரசாயன உணவு உட்கொள்வதுதான். கள் உணவின் ஒரு பகுதி. இதை குடித்து இறந்தவர் யாருமில்லை. ஆனால், டாஸ்மாக் மூலம் மதுபானம் விற்பனை செய்து மக்களை குடிக்கச் செய்கின்றனர். இதனால் பலர் உயிரிழக்கின்றனர். டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என 2016-ல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் வாயை மூடிக் கொண்டார். நாட்டிலேயே தமிழகத்தில் தான் மதுபான ஆலையை ஆட்சியாளர்கள் நடத்துகின்றனர். தாய்ப்பாலுக்கு இணையானது பனை மரத்தில் இருந்து வரும் கள். பனையை, தென்னையை எப்படி பயன்படுத்துவது என இளைய தலைமுறைக்கு கற்றுக்கொடுத்து, எதிர்காலத்தில் தற்சார்பு நிலையை அடையச் செய்வதுதான் இலக்கு.

மரபணு மாற்று விதைகள் மூலம் காய்கறி மற்றும் பழங்களை உற்பத்தி செய்கின்றனர். நாட்டு மாடுகளை அழித்து வருகின்றனர். இனத்தை அழிக்க வந்தவன், அவனுக்கு முதல் எதிரியான பனையையும் அழிக்க முயன்று வருகிறான். கள்ளுக்கான தடையை அரசு நீக்கவில்லை என்றால், அரசை நீக்க வேளாண் குடிமக்கள் முன்வர வேண்டும். இது செய்தி அரசாக உள்ளது. செயல் அரசாக இல்லை. வேளாண்மை என்பது வாழ்வியல். பனை நம்முடைய அடையாளம். பனை காடுகளை வளர்க்க வேண்டும். பனையை பாதுகாக்க வேண்டும். நானே நேரடியாக கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபடுவேன். 2 நாள் பயிற்சி எடுத்து பனைமரம் ஏறுவேன். எந்த வேலையும் இழிவல்ல. எந்த வேலையும் செய்யாமல் இருப்பதுதான் இழிவு” என்றார் சீமான்.