EBM News Tamil
Leading News Portal in Tamil

“அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருங்கள்” – சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் | Keep Tamil language vibrant for next 50 years: Singapore Minister Shanmugam


சிங்கப்பூர்: அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருக்குமாறு அடுத்த தலைமுறையினருக்கு சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ் மொழி (NUS TLS) சங்கம் தனது 50-வது ஆண்டு விழாவை கடந்த 17ம் தேதி கொண்டாடியது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ் மொழி சங்கத்தின் முன்னாள் மாணவரான சிங்கப்பூர் சட்ட அமைச்சர், மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “கடந்த 50 ஆண்டுகளாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ் மொழி சங்கம் அளித்துள்ள பங்களிப்புகள் பாராட்டுக்குரியவை. 50 ஆண்டு கால மொழி வளர்ச்சி, மாணவர் தலைமைத்துவம், கலாச்சாரம் ஆகியவற்றை இச்சங்கம் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழைத் துடிப்பாக வைத்திருக்க, உங்களைப் போன்ற இளம் முன்னோடிகள் எங்களுக்குத் தேவை. தமிழைப் பேசாதவர்களால் அது தொடர்ந்து மதிக்கப்படும் மொழியாகக் கருதப்பட முடியுமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். தமிழ் பேசாதவர்களையும் கூட தமிழ் மீது ஈடுபாட்டுடன் இருக்கச் செய்வது அவசியம். வகுப்பறைகள் மற்றும் சமூக மையங்களுக்கு அப்பால் முறைசாரா இடங்களில் தமிழ் மொழி பேசப்பட வேண்டும்.

இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளில், மேடையில் சரளமாக தமிழ் பேசக்கூடிய அமைச்சர்கள் இருப்பார்களா என்று நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் கூட தமிழ் பயன்பாட்டில் பரவலான சரிவு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தமிழ், ஆங்கிலம், சீனம் மற்றும் மலாய் ஆகிய 4 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 1960-70-களில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் தமிழில் விவாதித்தனர். தற்போது பல இளைஞர்கள் ஆங்கிலத்தில்தான் அதிகம் பேசுகிறார்கள். இத்தகைய போக்கால், தமிழ் மட்டுமல்ல, மாண்டரின் (சீன) மற்றும் மலாய் போன்ற பிற தாய்மொழிகளையும் பாதிக்கும்” என தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள 60 லட்சம் மக்கள் தொகையில் 75% சீனர்கள், பெரும்பாலும் மாண்டரின் பேசுபவர்கள், 15% க்கும் மேற்பட்ட மலாய்க்காரர்கள் மற்றும் 7% க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் பிறர் உள்ளனர்.