EBM News Tamil
Leading News Portal in Tamil

Stress Eating: இளம் தலைமுறையிடம் பெருகும் ‘டேஞ்சர்’ கலாச்சாரமும், அலர்ட் குறிப்புகளும்! | A doctor explanation about Stress Eating habits among youth explianed


‘இருக்கிறது ஒரு லைஃப்… நமக்கு சோறு முக்கியம்… நல்லா சாப்பிட்டு வாழ்க்கையை என்ஜாய் பண்ணுவோம்’ என இளைஞர்கள் பலரும் கூறக் கேட்டிருப்போம். மூன்று வேலையும் நன்றாக சாப்பிட வேண்டுமென ஓடி ஓடி உழைக்கிறோம், ஆனால் ஒருவேளை உணவைக் கூட நிம்மதியாக சாப்பிட முடியாமல் அல்லப்படுகிறோம். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில், இளைஞர்களிடையே `ஸ்ட்ரெஸ் ஈட்டிங்’ (Stress Eating) கலாச்சாரம் பெருகிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கான நிபுணரின் விளக்கத்தையும் காண்போம்.

நாகரிகம் வளர வளர மனிதர்களின் வாழ்க்கை முறையும் அதற்கு தகுந்தாற்போல மாறுபடும். நம் முன்னோரின் உணவு பழக்கத்துக்கும், தற்போதைய தலைமுறையின் உணவு பழக்கத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. உணவு மட்டுமல்ல… வாழ்க்கை முறையே முற்றிலும் மாறுபட்டுவிட்டது. இன்றைய தலைமுறையில் இளைஞர்கள் பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர். கல்வி, வேலை, இஎம்ஐ பிரச்சினை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என பல பொறுப்புகளை சமாளிக்க வேண்டியிருப்பதால் இளம் வயதிலேயே மன அழுத்தம், கவனச் சிதறல், தூக்கமின்மை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள். இதனால், உடல் ஆரோக்கியத்தில் போதுமான கவனம் செலுத்த முடியாமல் போகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் உணவு மீதான தேடல் அதிகரித்துள்ளது. உணவகங்கள் அதிகமாக பெருகிவிட்டன. ஆரோக்கியத்துக்காக இல்லாமல் சுவைக்காக உண்ணும் பழக்கம் நம்மிடையே அதிகமாக இருக்கிறது. சமூக வலைதளங்களை திறந்தால், இங்கே பிரியாணி ஆஃபர், இந்த ஸ்பாட் நால்லாருக்கும், ஒரு பீட்சா வாங்கினால், ஒரு பர்கர் இலவசம் என்ற விளம்பரங்கள் நம்மை உணவைத் தேடி கொண்டுச் செல்கிறது.

மிகவும் மன அழுத்தத்துடன் ஆக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நமது சக ஊழியர், ஒரு பிரியாணியை ஆர்டர் செய்து ராஜ்கிரண் ஸ்டைலில் சாப்பிடுவதை அடிக்கடி பார்க்க முடியும். பிரியாணி மட்டுமல்ல, அவர்களுக்கு பிடித்த என்ன உணவாக வேண்டுமானலும் இருக்கலாம். கேட்டால் இதுதான் `ஸ்ட்ரெஸ் ஈட்டிங்’ என்கிறார்கள். ‘சாப்பிட்டால், மனது இலகுவாகிவிடும்… பிறகு வேலையை பார்க்கலாம்’ என்பார்கள். அப்போதுதான், ஒருவர் மன அழுத்தம் நிறைந்த சமயத்தில் உணவின் மீது ஆர்வம் காட்டுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

சோறு முக்கியம்ல… – இது குறித்து இளைஞர் ஒருவரிடம் கேட்டதற்கு, “ஆபிஸ், குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கைன்னு நிறைய பிரச்சினை இருக்கு. ஒரு சில சமயத்துல ரொம்ப டென்ஷன் ஆனா ஒரு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, மீன் வறுவல், ஒரு ஐஸ் கிரீம்ன்னு புடிச்சத சாப்பிட்டா மனதுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். அதுக்கு பின்னாடி திரும்ப என் வேலைய பாப்பேன். மாசத்துக்கு ஒரு ரெண்டு, மூணு டைம் இப்படி சாப்பிடுவேன். ஒரு சில சமயத்துல பாஸ்ட் புட் சாப்பிடுவேன். அப்போதைக்கு இருக்கிற கோபம், டென்ஷன் எல்லாம் கம்மி ஆயிடும். எனக்கு மட்டுமில்ல, என் நண்பர்களுக்கு இந்த பழக்கம் இருக்கு” என்றார்.

ஒரு சிலருக்கு தங்களிடம் இருக்கும் மன அழுத்ததை எப்படி, யாரிடத்தில் காட்டுவது என தெரியாமல் உணவின் மீது காட்டுவதாக கூறுகிறார்கள். அதைவிட ஒரு சிலர், ஷாப்பிங் செய்து தங்களது மன அழுத்ததை போக்கிக் கொள்வதாக கூறுகிறார்கள். இன்றைய இளம் தலைமுறையினரிடம் இந்த பழக்கம் அதிகமாகிவிட்டதை அறிய முடிகிறது.

இது குறித்து முன்னணி சமச்சீர் உணவு ஆலோசகர் தாரிணி கிருஷ்ணனிடம் கேட்டபோது, “ஸ்ட்ரெஸ் ஈட்டிங் என்ற காலாச்சாரம் இன்றைய தலைமுறையினரிடம் சற்று அதிகரித்துள்ளதை மறுக்க முடியாது. முந்தையக் காலத்தில் மனிதர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால், கோயிலுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது பாஸ்ட் புட் கடைகளை நோக்கி செல்கிறார்கள்.

இன்றைய காலக்கட்டம் முற்றிலும் மாறிவிட்டது. கண்ட நேரத்தில், அளவுக்கு அதிகமான உணவை சாப்பிட்டால் எப்படி பிரச்சினை சரியாகும். அவர்களின் பிரச்சினைக்குதான் எப்படி தீர்வு கிடைக்கும். ஸ்ட்ரெஸ் ஈட்டிங் என்பது ஒரு தனிப்பட்ட மனிதரின் மனநிலை (emotions) சார்ந்தது அல்லது தொடர்புடையது. ஒரு சிலருக்கு இனிப்பு சார்ந்த பொருட்கள் பிடிக்கும், ஒரு சிலருக்கு ஸ்பைஸியாக சாப்பிட பிடிக்கும். இவை அனைத்தும் தனிப்பட்ட நபரின் மனநிலையோடு தொடர்புடையது.

எந்த ஓர் உணவையும் அளவாக எடுத்துக் கொண்டால் பிரச்சினை இருக்காது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான். அடிக்கடி இவ்வாறு சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படும். உடல் எடை அதிகரிக்கக் கூடும். குறிப்பாக பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினை உள்ளிட்டவைகள் ஏற்படும். இவ்வாறு சாப்பிடும் நபர்கள், மருத்துவர்களை அணுகி தீர்வு காண்பது நன்மை பயக்கும்” என்றார்.

வாயையும் வயிற்றையும் கட்டுப்படுத்த பழகிக்கொண்டால், உடலும் மனமும் நாம் சொல்வதைக் கேட்கும் என்பார்கள். துக்கங்கள் தொண்டையை கவ்வும்போது, வருடிக் கொடுக்கும் மயிலிறகாய் நம்மை கட்டி அணைப்பது உணவுதான். ஆனால் அதிலும் கவனம் தேவை!