மதுரா சிறைவாசிகள் அசத்திய ‘ஜெயில் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் – முன்முயற்சியின் பின்புலம் என்ன? | Jail Premier League played by inmates in Mathura prison
மதுரா: உத்தரப் பிரேதச மாநிலம் மதுராவில் அமைந்துள்ள மாவட்ட சிறைச்சாலையில் சிறைவாசிகளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் ஜெயில் பிரிமீயர் லீக் (ஜெபிஎல்) என்ற கிரிக்கெட் தொடரை சிறைச்சாலை நிர்வாகம் ஒருங்கிணைத்தது.
எட்டு அணிகளாக பிரிந்து சிறைவாசிகள் இந்த தொடரில் விளையாடினர். கடந்த ஏப்ரல் மாதம் இந்த தொடர் தொடங்கியது. இதில் 12 லீக் ஆட்டங்கள் மற்றும் 3 நாக்-அவுட் போட்டிகள் நடந்தன. இதில் இறுதிப் போட்டியில் கேபிட்டல்ஸ் அணியை நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி உள்ளது. ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் கேப் உள்ளிட்ட பரிசுகளும் அதிக ரன்கள், விக்கெட் வீழ்த்திய சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டது.
சிறைவாசிகளின் ஃபிட்னஸ்ஸை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை போக்கும் நோக்கிலும் இந்த ஜெபிஎல் லீக் நடத்தப்பட்டுள்ளது. “பெயில் கிடைக்காத அல்லது குடும்பத்தினரை சந்திக்காத சிறைவாசிகள் அதிக அளவில் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அதன் காரணமாக உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். அதை கருத்தில் கொண்டு ஜெபிஎல் லீக் தொடரை அறிமுகம் செய்தோம். இதன் மூலம் சிறைவாசிகள் ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும் என எண்ணுகிறோம். விளையாட்டு தான் அவர்களுக்கு மருந்து” என சிறைக் கண்காணிப்பாளர் அன்ஷும் கார்க் தெரிவித்துள்ளார்.
ஜெபிஎல் தொடரோடு வாலிபால், பாட்மின்டன் உள்ளிட்ட விளையாட்டு தொடர்களையும் சிறைவாசிகளுக்கு ஏற்பாடு சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. விளையாட்டு மட்டுமல்லாது ஆன்மிக ஆர்வம் கொண்ட சிறைவாசிகளுக்கு பஜனை, யோகா, வினாடி வினா, கட்டுரை எழுதும் போட்டி போன்றவற்றையம் சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் மூலம் திறன் படைத்த இளம் வீரர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அதுபோல ஜெபிஎல் லீக் தொடரும் சிறைவாசிகளுக்கு புது வாழ்வையும், புத்துணர்ச்சியை தரலாம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசன் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் 17-ம் தேதி முதல் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன.