EBM News Tamil
Leading News Portal in Tamil

மெலட்டூரில் பாகவத மேளா நாட்டிய நாடகம்! | Bhagavata Mela dance performance in Melattur


தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் 400 ஆண்டுகளை கடந்து ஆண்டுதோறும் நடைபெறும் பாகவதமேளா நாட்டிய நாடக மஹோத்சவம் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, நாடக விழாவை தொடங்கி வைத்தார். சென்னை கலாக்ஷேத்திராவின் முன்னாள் இயக்குநர் ரேவதி ராமசந்திரன், புகழ்பெற்ற குச்சிப்புடி நடன கலைஞர் கலா ரத்னா சத்தியநாராயணா, சென்னை சமஸ்கிருத கல்லூரியின் முன்னாள் முதல்வர் தேவிபிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

தொன்மை வாய்ந்த இக்கலை வடிவம் பாதுகாப்பதற்காகவும், அடுத்த தலைமுறையினர் பயன்பெறும் வகையிலும், மெலட்டூர் பாகவத மேளா குரு மகாலிங்கம், சுவடி வடிவில் இருந்த அனைத்து நாடக வடிவங்களையும் புத்தக வடிவில் வெளியிட ஏற்பாடு செய்துள்ளார். ஏற்கெனவே 10 நாடகங்கள், 8 புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது ருக்மிணி கல்யாணம் என்ற நாடக வடிவத்தின் புத்தகம் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை பாபாஜி ராஜா போன்ஸ்லே பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மெலட்டூர் வெங்கட்ராம சாஸ்திரியின் 10 படைப்புகளில் மகுடமாக விளங்கும் ப்ரஹ்லாத சரித்திரம் நாட்டிய நாடகம் நடைபெற்றது. அதிகாலையில் ஸ்ரீ நரசிம்ம அவதாரம் மற்றும் ஹிரண்யகசிபு வதம் ஆகியவற்றுடன் நாடகம் நிறைவுற்றது.

இந்நாடகத்தின் முக்கிய கதாபாத்திரங்களான லீலாவதி, ஹிரண்ய கசிபு மற்றும் ப்ரஹ்லாதா, நரசிம்ம சுவாமி என அனைத்து கதாபாத்திரங்களிலும் ஆண்களே நடித்தனர். இந்த நாடகம் பெரும்பாலும் எண்ணெய் விளக்கு ஒளியில் நடைபெற்றது.

முன்னதாக அறங்காவலர் ராமசந்திரன் வரவேற்றுப் பேசினார். பாகவத மேளா குரு கலைமாமணி மகாலிங்கம் ஏற்பாடுகளை செய்திருந்தார். தொடர்ந்து அரிச்சந்திரா பாகம் 1, 2, ருக்மணி கல்யாணம் ஆகிய நாடகங்கள் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஆஞ்சநேய உத்ஸவத்துடன் இவ்வருட விழா நிறைவு பெறவுள்ளது.