EBM News Tamil
Leading News Portal in Tamil

50 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு எழுதி பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்ற கோவை மூதாட்டி | old woman passed 12th exam after 50 years in coimbatore


கோவை: கோவையைச் சேர்ந்த 70 வயது பெண் தனித்தேர்வராக பிளஸ் 2 தேர்வெழுதி 346 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராணி (70). இவர் தேனியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியில் கணவருடன் வசித்து வந்தார். 2020-ல் கணவர் காலமானார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

தனியாக வசிக்கும் ராணி கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். நிகழாண்டில் தனித்தேர்வராக பிளஸ் 2 தேர்வு எழுதி 346 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து, ராணி கூறும்போது, “சிறுவயதில் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அந்த கால சூழ்நிலையில் உயர்கல்வி செல்ல முடியவில்லை.

5 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உயிரிழந்த நிலையில் என்ன செய்வது என்று யோசித்தேன். உயர் கல்வி பயில வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதையடுத்து, கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்ச்சி பெற்றேன். தற்போது பிளஸ் 2 தனித் தேர்வராக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். 50 ஆண்டுகளுக்கு பிறகு படித்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி. யோகா பட்டப் படிப்பு படிக்க விருப்பம் உள்ளது” என்றார். கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்த ராணியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.