வாரச் சந்தை, தினச் சந்தை, மாதச் சந்தை என ஒவ்வொரு ஊரிலும் விவசாயப் பொருட்கள், உணவுக்கான அடிப்படைப் பொருட்களை விற்பனை செய்ய சந்தை நடைபெறுவது வழக்கம். வணிகம் தொடங்கிய காலம் முதலே ஒவ்வொரு ஊரிலும் பாரம்பரியமாகச் சந்தை அமைப்பது வாடிக்கை. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூட சந்தை விற்பனை கொடிக்கட்டிப் பறந்தது. ஆன்லைன் வர்த்தகம் கோலோச்சத் தொடங்கிய காலத்துக்குப் பிறகுச் சந்தை விற்பனை இலேசாகக் குறைந்ததாக வருத்தப்படுபவர்கள் உண்டு.
என்னதான் ஆன்லைனின் பல்வேறு பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்கினாலும், நேரடியாகச் சென்று ஒரு பொருளைச் சோதித்து வாங்கும் போது முழுமையான திருப்தி கிடைக்கும். அதற்குச் சந்தை விற்பனை பேருதவி புரியும். ஒரு குடும்பத்துக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளும் வகையில் சந்தை விற்பனை வடிவமைக்கப்பட்டிருக்கும். உணவியலின் அடிப்படையை அறிந்துகொள்ளும் களமாகவும் சந்தைகள் செயல்படுகின்றன.
காலை வேளையிலேயே சந்தைக்குச் சென்று தேவைப்படும் அரிசி வகைகள், காய் ரகங்கள், இறைச்சி ஆகியவற்றை வாங்கிக்கொண்டு காலை வேளை உணவையும் சந்தையிலேயே முடித்துவிட்டு வீடு திரும்பிய அக்கால நினைவு பலருக்கும் இருக்கலாம். அதுவும் சந்தையில் பரிமாறப்படும் காலை மற்றும் மதிய வேளை ‘சந்தைக்கறி உணவுகள்’ மிகப் பிரசித்தம்!
அப்படி நினைவுகளை மீட்டெடுக்க, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி வாரச் சந்தைக்குப் பயணப்பட்டோம்! ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் இருக்கும் கந்திலிப் பகுதி பரபரப்பாக இயங்குகிறது. கந்திலிச் சந்தை ஆடுகளுக்கான விற்பனையில் தனித்துவம் பெற்றது. ஆட்டுச் சந்தையைப் பார்வையிட்ட பின் கொஞ்சம் உணவுப் பொருட்களை வாங்கி முடிக்க, மணி எட்டைத் தொட்டிருந்தது!
சந்தைக் கறி உணவகம்
பசி வயிற்றைக் கிள்ள சந்தையில் உள்ள சந்தைக் கறி உணவுகத்துக்குள் நுழைந்தோம்! கேழ்வரகு மாவைப் பிசைந்து கையளவு பந்துகளாக உருட்டிக் கொண்டிருந்தார்கள். அசைவ உணவுகளுக்கான மசாலா தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியைக் குழம்புக்காக சமைத்துக் கொண்டிருந்தார்கள். உணவகங்களில் இருப்பது போன்ற மேசை நாற்காலி எல்லாம் சந்தைக் கறி உணவகத்தில் இல்லை. பழைய செய்தித்தாளை விரித்துப் போட்டு சம்மணமிட்டு கீழே அமர்ந்து உணவைச் சாப்பிட வேண்டும்!
சந்தைக் கறி உணவகத்தில் காலை உணவைச் சாப்பிடுவதற்காக மக்கள் கூட்டம் அலை மோதியது.
கேழ்வரகு களியும் இறைச்சி உணவும்
கந்திலிச் சந்தையில் கேழ்வரகுக் களி உருண்டைக்கு இறைச்சிக் குழம்பைத் தொட்டுச் சாப்பிடும் காம்போ பிரபலம். ஆவி பறக்க வாழை இலையில் பரிமாறப்படும் கேழ்வரகுக் களியைச் சாப்பிடுவதோடு வீட்டுக்குப் பார்சல் வாங்கிச் செல்பவர்களும் இருக்கிறார்கள்.
களி தவிர இட்லி, சாப்பாடும் உண்டு! களி / கறிக் குழம்பு அல்லது சாப்பாடு / கறிக் குழம்பின் விலை நூற்றைம்பது ரூபாய்! களி மட்டும் நாற்பது ரூபாய், சாப்பாடு ஐம்பது ரூபாய்! பசியாற ஆசைத் தீர சாப்பிட்டுவிட்டு திருப்தியாகக் காலை உணவை முடித்துக்கொள்ளும் பலரைப் பார்க்க முடிந்தது. விறகடுப்பின் உதவியுடன் மிகப் பெரும் வாணலியிலும் பாத்திரத்திலும் சமையல் களைக்கட்டுகிறது. ஈரல், குடல் என தேவைக்கு ஏற்ப அப்போதைக்குச் சமைத்துக் கொடுக்கிறார்கள்.
பதமாக உருட்டப்பட்ட கேழ்வரகு களிக்கு நாட்டுக் கோழி குழம்பைத் துணைக்கு அழைத்துக்கொள்ள அப்படியொரு சுவை! இட்லி – கறிக் குழம்பு சேர்வையும் சுவையாக இருக்கிறது. சந்தையிலேயே இறைச்சி வாங்கிக் கொடுத்து சமைத்துக் கொடுக்கச் சொன்னால் அதற்கான தொகையைப் பெற்றுக் கொண்டு சிறப்பாகப் பரிமாறுகிறார்கள். பொதுவாகச் சந்தைக் கறி உணவுகளில் காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். நமக்கென தனியாகச் சமைக்கச் சொல்லும் போது நமது தேவைக்கு ஏற்ப சுவையின் சேர்மானம் கிடைக்கும்.
அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் சந்தைக் கறி உணவுகளை ருசிப்பதற்காக மக்கள் வருகிறார்கள். அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளின் பசி ஆற்றுவதற்கான அமைப்பாகவும் சந்தைக் கறி உணவகம் இருக்கிறது. சந்தையில் வணிகம் செய்ய வரும் பெரும்பாலானோர் காலை உணவை அங்குத் தான் முடித்துக்கொள்கிறார்கள். காலையில் தொடங்கும் உணவகம் இடைவெளி விடாமல் மதியம் வரை நீள்கிறது.
திருப்பத்தூர் பகுதியில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு பகுதியில் சந்தை நடைபெறுகிறது. இதைப் போல ஒவ்வொரு ஊரிலும் தினச் சந்தை நிச்சயம் நடைபெறும். வாய்ப்பு இருக்கும் இடங்களுக்குச் சென்று சந்தைக் கறி உணவுகளை ஒரு முறை சாப்பிட்டுப் பாருங்கள், வித்தியாசமான அனுபவமாக இருக்கும்!
சந்தைக் கறி உணவுகள்… அசைவப் பிரியர்களுக்கானது!
கட்டுரையாளர், சித்த மருத்துவர் .