EBM News Tamil
Leading News Portal in Tamil

கோவையில் அதிகரித்து வரும் ‘பிக்கிள் பால்’ விளையாட்டு மைதானங்கள்! | Pickleball playground are rise in Coimbatore


கோவை: மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக உள்ள ‘பிக்கிள் பால்’ விளையாட்டு இப்போது கோவையில் அறிமுகமாகி 40-க்கும் மேற்பட்ட மைதானங்களில் விளையாடப்பட்டு வருகிறது. டென்னிஸ் மற்றும் பாட்மிண்டன் விளையாட்டுகளின் கலவையான ‘பிக்கிள் பால்’ விளையாட்டு, அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவிலும் பரவலாக விளையாடப்பட்டு வருகிறது. சுமார் 16 மாநிலங்களில் ‘பிக்கிள் பால்’ விளையாடப்பட்டு வருகிறது.

அனைத்து வயதினரையும் ஈர்க்கும் ‘பிக்கிள் பால்’ விளையாட்டு டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு தொடங்கி இப்போது கோவை உள்ளிட்ட 2-ம் நிலை நகரங்களுக்கு பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவில் 3000-க்கும் மேலான பதிவு செய்யப்பட்ட ‘பிக்கிள் பால்’ விளையாட்டு வீரர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இவ்விளையாட்டுக்காக 1,000-க்கும் மேற்பட்ட மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கோவையில் 40-க்கும் மேற்பட்ட ‘பிக்கிள் பால்’ விளையாட்டு மைதானங்கள் உருவாகி உள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு ‘பிக்கிள் பால்’ சங்கத்தின் மாநில செயலாளர் காளிதாஸ், கோவை மாவட்ட செயலாளர் குமரேசன் ஆகியோர் கூறும்போது, “தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் சென்னை ஓபன் போட்டி நடைபெறுகிறது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான அணிகள் பங்கேற்கின்றன.

மாநிலம் முழுவதும் சுமார் 200 பிக்கிள் பால் மைதானங்கள் உள்ளன. வியட்நாமில் நடைபெற உள்ள ‘பிக்கிள் பால்’ ஆசிய போட்டியில் விளையாட திருவண்ணாமலையைச் சேர்ந்த 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து கோவை உட்பட இதர மாவட்டங்களிலும் ‘பிக்கிள் பால்’ விளையாட்டு அனைத்து தரப்பினரிடையே பரவலாக பிரபலமாகி வருகிறது.

இந்தியாவிலேயே டென்னிஸ் விளையாட்டுக்கு அடுத்து அதிகம் விளையாடும் விளையாட்டாக ‘பிக்கிள் பால்’ உருவெடுத்துள்ளது” என்றனர். நவ இந்தியாவில் ‘பிக்கிள் பால்’ விளையாட்டு மைதானம் நடத்திவரும் அபிலாஷா கூறும்போது, “கோவை நகரில் ‘பிக்கிள் பால்’ விளையாட்டை சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ஆர்வமாக விளையாடி வருகின்றனர். டென்னிஸ் மைதானத்தில் நான்கில் ஒரு பங்கு அளவை மட்டும் கொண்ட இந்த விளையாட்டு மைதானத்தில் ஒற்றையர் பிரிவில் இருவரும், இரட்டையர் பிரிவில் 4 பேரும் விளையாட முடியும்.

காலை அலுவலகப் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவோர் மாலை நேரங்களில் ‘பிக்கிள் பால்’ விளையாடுகின்றனர். 1 மணி நேரத்துக்கு நபர் ஒருவருக்கு ரூ.200 கட்டணம் செலுத்தி விளையாடலாம். இந்த விளையாட்டை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்” என்றார்.