புதிய தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட முனீஸ்வரன் சிலைகள் – சுதை சிற்பக் கலைஞர் அசத்தல் | Giant Muneeswaran statues using new technology in kanchipuram
காஞ்சிபுரத்தை அடுத்த தேனம்பாக்கம் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் இரும்பு ராடு கம்பிகள் பயன்படுத்துவதை தவிர்த்து, 200 ஆண்டுகள் நீடித்து இருக்கும் வகையில் தலா 100 கிலோ காப்பர் கம்பிகளால், புதிய தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமான 3 முனீஸ்வரன் சிலைகளை தத்ரூபமான முறையில் மாமல்லபுரம் சுதை சிற்பக்கலைஞர் வடிவமைத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த சுதை சிற்பக்கலைஞர் ஸ்ரீதரன்(47). சிற்பக் கலைஞராக உள்ளார். இவர், மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலைக் கல்லூரியில் சுதை சிற்ப பிரிவில் பிஎஸ்சி பட்டம் பெற்ற சிற்பக் கலைஞராவார். மேலும், தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கோயில்கள் மற்றும் தனியார் கோயில்களில் அதிகளவில் சுதை சிற்பங்களை வடிவமைத்து, தமிழக அரசின் விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் திருப்பணிகளை இவர் மேற்கொண்டு வருகிறார். இதில், அந்த கோயில் வளாகத்தில் 12 அடி உயரத்தில் வால்முனி, 18 அடி உயரத்தில் செம்முனி, 10 அடி உயரத்தில் சங்கிலிமுனி என 3 முனீஸ்வரன் சுதை சிலைகளை வடிவமைத்துள்ளார்.
இவை நூற்றாண்டுகள் தாண்டி நீடித்திருக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுதை சிலைகள் இரும்பு ராடுகளை கொண்டு வடிவமைக்கும்போது, அவை உள்ளே துருபிடித்து சில ஆண்டுகளில் அந்த சிலைகள் உடைந்து சிதிலமடைந்து விடும்.
இதனை தவிர்க்கும் வகையில், 200 ஆண்டுகள் முனீஸ்வரன் சிலைகள் பக்தர்களுக்கு அருள்பாளித்து நீடித்திருக்கும் வகையில் வால்முனி, செம்முனி, சங்கிலிமுனி ஆகிய 3 சிலைகளையும் தலா 100 கிலோ காப்பர் கம்பிகளை கொண்டு 10 அடிக்கும் மேலான உயரத்தில் கம்பீரமான தோற்றத்தில் வடிவமைத்து வண்ணம் தீட்டப்பட்டு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கோயில்களில் முதன்முறையாக காப்பர் கம்பிகளை கொண்டு அமைக்கப்பட்ட சிலைகள் இவைதான். தற்போது, கும்பாபிஷேகம் நிறைவடைந்து பக்தர்கள் மேற்கண்ட சுவாமி சிலைகளை பார்த்து வழிபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, மாமல்லபுரம் சுதை சிற்பக்கலைஞர் கோ.ஸ்ரீதரன் ஸ்தபதி கூறும்போது: தேனம்பாக்கம் ஸ்ரீபச்சையம்மன் கோயில் திருப்பணிகள் பழமை மாறாமல், பழங்கால சுண்ணாம்பு கலவை சிற்பங்களை போல, தத்ரூபமாக சிமெண்ட் கலவையால் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, 3 முனிகளின் சிலைகள் பழமை மாறாமல் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, புயல், இடிமின்னல், சூறாவளிகாற்று போன்ற பேரிடர்களை தாங்கி நூற்றாண்டுகளைத் தாண்டி நீடித்து இருக்கும் வகையில், இரும்பு கம்பிகளை தவிர்த்து காப்பர் கம்பிகளால் 300 மூட்டை சிமெண்ட் கலவையின் மூலம், வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சிலைகள் வருங்காலத்தில் காப்பர் கம்பிகளை பயன்படுத்தும் தொழில்நுட்பத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் எனவும் நம்புகிறேன் என்றார்.