EBM News Tamil
Leading News Portal in Tamil

இயற்கை விவசாயத்தில் அசத்தும் உதகை அரசுப் பள்ளி மாணவர்கள்! | govt school students excellent in organic farming in udhagai


உதகை: உதகையில் தாங்கள் தயாரித்த இயற்கை உரத்தை வைத்து அழகிய பூங்காவை அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இயற்கை முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்து விழுந்த இலைகள், தேவையற்ற உணவுப் பொருட்கள், தேவையற்ற கழிவுகளை பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் மாணவர்கள் கொட்டி வந்தனர்.

நாளடைவில் மாணவர்களிடையே புது யோசனை உதித்தது. அதன்படி, பள்ளி ஆசிரியர் ராஜ்குமார் வழிகாட்டுதலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மரங்களில் இருந்து விழுந்த இலைகள் மற்றும் குப்பையை பள்ளியின் பின்புறம் குழி தோண்டி மாணவர்கள் சேகரித்து வந்தனர். அதில் மண்புழு உரத்தையும் கலந்து வைத்தனர். தற்போது அது இயற்கை உரமாக மாறியுள்ளது. இந்த உரத்தை பயன்படுத்தி பள்ளியில் தோட்டம் மற்றும் பூங்காவை சீனியர் ரெட் கிராஸ் அமைப்பை சார்ந்த மாணவர்கள் அமைத்துள்ளனர்.

மாணவர்கள் தயாரித்த இயற்கை உரம்.

காய்கறிகள் விளைச்சல் பள்ளி வளாகத்தில் கேரட், முள்ளங்கி, பீட்ரூட், கொத்தமல்லி என மலை மாவட்டத்தில் விளையக்கூடிய காய்கறிகளை விளைவித்துள்ளனர். விளையும் காய்கறிகளை, ஆசிரியர்களுக்கு விற்பனை செய்து அதில் கிடைத்த தொகையில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கின்றனர்.

பள்ளியில் பாடங்களை படித்துக் கொண்டே இயற்கை உரம் தயாரித்து, அதன் மூலம் இயற்கை விவசாயம் செய்து காய்கறிகளை விளைவிக்கும் மாணவர்களின் இந்த செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. மாணவர்கள் தயாரித்த இயற்கை உரம்.உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்கை விவசாய முறையில் காய்கறி தோட்டம் அமைத்து பராமரிக்கும் மாணவர்கள்.