EBM News Tamil
Leading News Portal in Tamil

காதலருடன் மனைவியை சேர்த்து வைத்த கணவர் – பின்புலத்தில் தந்தைப் பாசம்! | about husband kept his wife with his lover together in lucknow was explained


லக்னோ: காதலருடன் மனைவியை கணவரே சேர்த்து வைத்து சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இதன் பின்னணியின் தந்தைப் பாசம் இருப்பதை அறிந்து, அந்த நபரை பலரும் மனதார பாராட்டி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தின் சந்து கபீர் நகர் மாவட்டம், கதார் ஜோட் கிராமத்தை சேர்ந்தவர் பப்லு. இவருக்கும் கோரக்பூர் பகுதியை சேர்ந்த ராதிகாவுக்கும் கடந்த 2017-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஆர்யன் (7) என்ற மகனும் ஷிவானி (2) என்ற மகளும் உள்ளனர்.

தொழிலாளியான பப்லு குடும்பத்தை காப்பாற்ற வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். சில மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே அவர் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இந்தச் சூழலில் ராதிகாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த விகாஸ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

இதுகுறித்து பப்லுவுக்கு அண்மையில் தெரியவந்தது. அவர் மனைவியை கண்டித்தார். இதைத் தொடர்ந்து விகாஸும் ராதிகாவும் தலைமறைவாகி விட்டனர். கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் மனைவி ராதிகாவை, பப்லு தேடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன்பு விகாஸும் ராதிகாவும் ஒன்றாக கிராமத்துக்கு திரும்பி வந்தனர்.

இந்த விவகாரம் குறித்து கிராம தலைவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, மனைவி ராதிகாவை அவரது காதலர் விகாஸ் உடன் சேர்த்து வைக்குமாறு பப்லு பகிரங்கமாக கூறினார். எனினும் குழந்தைகள் ஆர்யன், ஷிவானி என்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் மன்றாடினார்.

இதை ராதிகா முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார். குழந்தைகளை அவர் உரிமை கொண்டாடவில்லை. காதலர் விகாஸ் உடன் செல்ல விரும்புவதாக கிராம தலைவர்கள் முன்னிலையில் அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து அங்குள்ள சிவன் கோயிலில் விகாஸ், ராதிகாவின் திருமணம் நடைபெற்றது. இதில் கணவர் பப்லுவும் பங்கேற்று புதுமண தம்பதியை வாழ்த்தினார். தாய் ராதிகா பிரிந்து செல்வதை பார்த்து இரு குழந்தைகளும் கண்ணீர்விட்டு கதறி அழுதன. ஆனால் அவர் புது கணவருடன் புதிய வாழ்க்கையை தொடங்க சென்றுவிட்டார்.

திருமணத்தை மீறிய உறவால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிர்ச்சியூட்டும் கொலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு நேர்மாறாக சூழ்நிலையை உணர்ந்து மனைவியை விட்டுக் கொடுத்து, குழந்தைகளுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த பப்லுவை சமூக வலைதளவாசிகள் மனதார பாராட்டி வருகின்றனர்.