கோவை: கோவை மாநகர தெருக்களில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்திக் கடிப்பதும், நாய் குறுக்கே செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து படுகாயமடைந்து கை, கால் முறிவு ஏற்படுவதும், சில நேரங்களில் பலத்த தலைக்காயங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கோவையில் அண்மையில் தெரு நாய் கடித்து ரேபீஸ் பாதித்த நிலையில் பயந்து போன வடமாநில தொழிலாளி அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் கடந்த 2023-ல் நடத்திய கணக்கெடுப்பில் சுமார் 1.11 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2018-ல் 46,292 ஆக இருந்த தெருநாய்களின் எண்ணிக்கை இப்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. கோவையில் பெருகிவிட்ட தெருநாய்களால் தெருநாய்க்கடி சம்பவங்களும் சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. தெருநாய்க்கடிக்கு ஆளாகும் பொதுமக்கள் கோவை அரசு மருத்துவமனை, நகர்ப்புற சுகாதார நிலையங்களுக்குச் சென்று ரேபீஸ் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 2022-ல் 25,910 பேர் தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அதேபோல 2023-ல் 27,235 பேர் தெருநாய்க்கடிக்கு ஆளானதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2024 ஜனவரி முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை சுமார் 20120 பேர் புறநோயாளியாக நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று சென்றனர். இதே காலக்கட்டத்தில் உள்நோயாளிகளாக 1917 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று சென்றனர். வளர்ப்பு நாய் கடித்தாலோ, தெருநாய் கடித்தாலோ அலட்சியப்படுத்தக் கூடாது. நாய் கடித்த இடத்தில் தண்ணீரை விட்டு நன்றாக கழுவ வேண்டும். உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் காண்பித்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
நாய் கடித்து ரேபீஸ் வைரஸ் நரம்புகள் வழியாக மூளையை சென்றடைவதற்குள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். குறிப்பாக தலை, கழுத்து பகுதியில் நாய் கடித்தால் தாமதம் செய்யாமல் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடும்போது ரேபீஸ் வைரஸ் மூளைக்கு செல்லாமல் தடுக்கப்படும். தடுப்பூசி போடுவது தாமதமாகும்போது ரேபீஸ் வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. ரேபீஸ் தாக்கினால் மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது. ரேபீஸ் மரணத்தை விளைவிக்கும்.
எனவே, நாய்க்கடி என்று அலட்சியப் படுத்தக்கூடாது. நாய்க்கடிக்கு நான்கு வகையாகப் பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாய் கடித்தால் 5 தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ரேபீஸை பொறுத்தவரை ஆண்டுக்கு 2 முதல் 3 பேர் தான் பாதிப்புக்கு ஆளாகின்றனர். நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் போது ரேபீஸில் இருந்து தற்காத்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, தன்னார்வ தொண்டு நிறுவனமான ஹியூமன் அனிமல் சொசைட்டி (ஹெச்.ஏ.எஸ்.) முதன்மை இயக்க அதிகாரி அல்போன்ஸ் கூறும்போது, “தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கருத்தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி செய்து வருகிறது. அதேவேளையில் தெருக்களில் குவியும் குப்பைகளை முறையாக கையாள வேண்டும். இதை முறையாக செய்யும்போது தெருநாய் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.
தற்போது நான்கு நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலமாக நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. வளர்ப்பு நாய்களை வைத்திருப்போருக்குத் தான் முதலில் நாய்க்கடி பாதிப்பு அபாயம் அதிகம் உள்ளது. வீடுகளில் நாய்களை வளர்ப்போர் ஆண்டு தோறும் ஒரு முறை ரேபீஸ் தடுப்பூசி போட வேண்டும். ஒரு வேளை வளர்ப்பு நாய்களை, தெருநாய்கள் கடித்துவிட்டாலும் வளர்ப்பு நாய்களுக்கு கட்டாயம் ரேபீஸ் தடுப்பூசி போட வேண்டும்” என்றார்.