EBM News Tamil
Leading News Portal in Tamil

30 நிமிடங்களில் 25,000 லிட்டர் மழை நீரை சேகரித்த பெங்களூரு வாசி! – நெட்டிசன்கள் பாராட்டு | Bengaluru resident collects 25000 liters of rainwater in 30 minutes


பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று கனமழை பதிவானது. இந்நிலையில், நேற்று மாலை பொழிந்த மழையில் வெறும் 30 நிமிடங்களில் சுமார் 25,000 லிட்டர் மழை நீரை சேகரித்ததாக பெங்களூரு வாசியான சந்தோஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

அவரது வீடியோ பல நெட்டிசன்களை ஈர்த்துள்ளது. மேலும், அவரது முயற்சியை பலரும் பாராட்டி உள்ளனர். தனது எக்ஸ் சமூக வலைதள பயோவில் முன்னாள் இந்திய ராணுவ வீரர் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பெங்களூரு மழை. முறையான திட்டமிடலுக்கு கிடைத்த பலன். மாலையில் பதிவான 30 நிமிடங்கள் மழையில், சுமார் 25,000 லிட்டர் தண்ணீரை சேகரித்துள்ளோம். வீட்டு உபயோகத்துக்கு 15,000 லிட்டர் மற்றும் தோட்டத்து பயன்பாட்டுக்கு 10,000 லிட்டர் கிடைத்துள்ளது” என மழை நீர் சேகரித்த வீடியோவை சந்தோஷ் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ, அவரது மழைநீர் சேகரிப்பு முறையை விளக்கும் வகையில் உள்ளது. மழைநீர் சேகரிப்பு தொட்டி மற்றும் அதற்கு மழை நீரை கொண்டு செல்லும் குழாய்கள் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. அவரது முயற்சியை பலரும் பாராட்டி இருந்தனர். சிலர் சந்தேகங்களும் கேட்டிருந்தனர். அதற்கான பதிலையும் அவர் தந்திருந்தார்.

‘தோட்டத்து தேவைக்கு சேகரிக்கப்படும் மழை நீரை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. வீட்டு தேவைக்கு சேகரிக்கப்படும் நீரை சேமிக்க ஃபில்டர்கள் உள்ளன’ என சந்தோஷ் தெரிவித்தார். மழை நீரை சேகரிக்க முறையே 16,000 லிட்டர் மற்றும் 12,000 லிட்டர் கொள்ளளவில் தொட்டியை அமைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.