‘காதல் உறவால் உங்கள் பிள்ளைகள் உணர்வுகளோடு விளையாடாதீர்!’ – எச்சரிக்கும் உளவியல் நிபுணர்கள் | Your affair can be devastating for children: Psychologists warn
தந்தைக்கோ, தாய்க்கோ வீட்டைத் தாண்டி வேறொரு காதலுறவு இருந்தால் அது ஒரு குழந்தையின் மனநிலையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற பார்வை சார்ந்தது இக்கட்டுரை. மனிதர்கள் பிரச்சினைகளை அணுகுவதிலும், அதிலிருந்து விடுவித்துக் கொள்வதிலும் வேறுபட்டவர்கள் என்பதால் இந்தப் பிரச்சினையில் இப்படியான எதிர்வினைகள்தான் இருக்கும், இருக்காது என்றெல்லாம் பொதுமைப்படுத்தாமல் அணுக முயற்சிக்கிறேன்.
திருமணமானவர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் வேறொரு காதலுறவு என்பது சட்டபூர்வமானது அல்ல என்று தெரிந்தே தான் அத்தகைய உறவை அதில் ஈடுபடுபவர்கள் முன்னெடுக்கின்றனர். அதனாலேயே அதைப் பற்றி யாரிடமும், ஏன் நெருங்கிய நட்பு வட்டத்தில் கூட சொல்லிக் கொள்வதில்லை. ஒருவேளை அது கணவனுக்கோ / மனைவிக்கோ அல்லது குழந்தைகளுக்கோ தெரியவரும்போது குடும்பத்தில் ஓர் உணர்வுப் பிரளயத்தையே ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள் இந்த சச்சரவைப் புரிந்து கொள்வதில் பெரும் போராட்டத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஒருவேளை அந்தக் குழந்தை பதின்ம வயது அல்லது அதனை நெருங்கும் வயதில் இருக்கும் பெண் பிள்ளை என வைத்துக் கொள்வோம். அது அவர் பூப்பெய்தும் நேரமாக இருக்கலாம். ஏற்கெனவே ஹார்மோன் மாற்றங்களால் அது சார்ந்த அச்ச உணர்வுகள், சக தோழிகளால் ஏற்படும் அழுத்தங்கள் இருக்கும். பூப்பெய்த குழந்தையாக இருந்தால் இன்ஃபேச்சுவேஷன் போன்ற பாலின ஈர்ப்புகளைப் பற்றிய அச்சங்களோடு இருக்கலாம். அந்த நேரத்தில் தந்தையோ, தாயோ இத்தகைய பிரச்சினையுடன் வந்தால் அது அவர்களின் உணர்வுகளின் மீது மிகப் பெரிய அடியாக இருக்கும்.
ஆய்வுகள் சொல்வதென்ன..? – இந்தச் சூழலில் சம்பந்தப்பட்ட குழந்தை உணர்வுச் சுழலில் சிக்க வாய்ப்புள்ளது என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மகிழ்ச்சியான, அரவணைப்பு மிகுந்த குடும்பங்களில் வளரும் குழந்தைகள் அனைவருடன் இயல்பாகப் பழகும் பண்போடு இருக்கின்றனர். ஆனால் தாய், தந்தை வேறொரு காதலுறவில் இருக்கும் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் அதேபோல் மனோதிடத்துடன், மகிழ்ச்சியுடன் வளர்வதில்லை. பெற்றோரின் வேறொரு காதலுறவு என்பது நம்பிக்கை துரோகமாக மட்டும் உருவகப்படுவதில்லை. அது குழந்தைகளின் மனங்களில் நம்பகத்தன்மை, குடும்ப உறவுகளின் நீடித்த நிலைத்த தன்மை, தனிநபர் அடையாளம் சார்ந்த சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
உள்ளுக்குள் ஏற்படும் காயம்: இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் குழந்தைகள் உள்ளுக்குள் கவலைகளை தேக்க முற்படுவர். குறிப்பாக, இந்தக் குடும்பத்தை பிணைப்புடன் வைக்க நான் மட்டும் போதாதா என்ற ஐயம் அவர்களுக்கு ஏற்படும். அது அவர்களுக்கு ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தும். தேவையற்ற அந்த குற்றக் உணர்வு அவர்களை நீண்ட கால உணர்வுபூர்வ பாதிப்புகளில் ஆழ்த்திவிடும். அதன் விளைவக சில குழந்தைகள் மிகையான சுதந்திரம், நெருக்கம் குறித்த பயம் போன்றவற்றில் சிக்குகின்றனர். சில நேரங்களில் உறவுகளில் சமரசம் செய்வதையும் எல்லை கடந்து அனுமதிக்கின்றனர். எதிர்காலத்தில் ஆரோக்கியமான உறவுகளை அமைத்துக் கொள்வதில் கூட அவர்கள் திணறக் கூடும்.
‘அந்த பிம்பம் உடையும்போது…’ – ஒவ்வொரு குழந்தைக்கும் தன் தாய் / தந்தை தான் மாஸ் ஹீரோ. அவர்களால் இந்த உலகத்தில் எதையும் சாதிக்க முடியும் என்ற பார்வை தான் குழந்தைகளுக்கு இருக்கும். அந்த பிம்பம் உடையும்போது குழந்தை பதின்ம வயதோ, அதற்கு முந்தைய வயதோ எந்த வயதில் இருந்தாலும் உணர்வு ரீதியாக பாதிக்கப்படக் கூடும். உணர்வு ரீதியான தாக்கத்துக்கும் வயதுக்கும் நேரடித் தொடர்பில்லை. இருப்பினும் சிறிய குழந்தைகளைவிட வளர்ந்த குழந்தைகள் இத்தகைய சவால்களை கொஞ்சம் வித்தியாசமாக அணுகலாம்.
பதின்ம வயதை தாண்டிவிட்டவர்களுக்கு இருத்தல் சார்ந்த கேள்விகள் ஏற்படலாம். சிலர் இப்போது இந்த நபரைத் தான் அப்பா / அம்மாவுக்கு பிடித்திருக்கிறது என்றால் முன்பு அவர்கள் துணைக்கு காட்டிய அன்பு உண்மையானதா என்ற சந்தேகம் எழும். அதேபோல் எதிர்காலத்தில் அவர்களிடம் யாரேனும் காதலோடு அணுகினால் அவர்கள் மீதும் நம்பிக்கை ஏற்படாமல் போக வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் நம்பிக்கை துரோகம் தொடர்பான வாழ்நாள் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும்.
சில குடும்பங்களில் குழந்தைகளின் அறியாமையை பெற்றோர் இருவரில் ஒருவருக்கு எதிராக திருப்பிவிடும் முயற்சிகளும் நடக்கும். இவையெல்லாம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையாகும்.
நீங்கள் என்ன செய்யலாம்? – இத்தனை சிக்கல் இருக்கிறதா, என்னதான் தீர்வு என்று யாரேனும் கேட்டால், உங்கள் மோசமான செயல்களுக்கும் நீங்கள் முழு பொறுப்பேற்பது முதல் படி என்று அறிவுறுத்துகின்றனர் உளவியல் நிபுணர்கள். தங்களின் தவறுக்கு பொறுப்பேற்றால் மட்டும் போதாது. தங்களால் தங்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்டு மன அழுத்தம், உணர்வுப் போராட்டத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
தாங்கள் செய்த பிழையைத் திருத்தி அன்பின் மீதான நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும். எனக்குள் என்ன மாதிரியான போராட்டம் நிகழ்ந்தாலும் ஒரு தாயாக / தந்தையாக உன் னை நான் எந்த நிபந்தனையுமின்றி, பூரணமாக நேசிக்கிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். வளர்ந்த பிள்ளைகளாக இருந்தால் அவர்களிடம் வெளிப்படையாகப் பேசிவிடுவது நல்லது. ரகசியமாக உறவைத் தொடர்வதோ அல்லது தான் அப்படியொரு உறவுக்குள் சென்றதற்கு அது, இது என எதையாவது காரணமாகக் கூறி பழியை திசைதிருப்பவோ முயற்சிப்பது கூடாது.
இதுபோன்ற உறவுகள் பொது வெளியில் அம்பலமாகும் போது குழந்தைகளும் அவமானப்பட்டதாக உணர்கின்றனர். இதனால் அவர்கள் வெளிவட்டாரத் தொடர்புகளை சுருக்கிக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது. சிலர் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் சிலர் சமூக வலைதளங்களில் தங்களை மிகப் பெரிய ஆளுமையாகக் காட்டிக் கொண்டு உள்ளுக்குள் உளவியல் சிக்கலில் ஆழ்ந்துவிடுகின்றனர்.
ஒரு தாயோ / தந்தையோ காதல் உறவு தொடர்பாக தாங்கள் எடுத்த முடிவு அவர்கள் குடும்ப உறவுகள் மீது வைத்திருக்கும் மதிப்பீடுகளின் வெளிப்பாடு அல்ல என்று வளர்ந்த குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். பெற்றோரின் தவறால் குழந்தைகளின் ஆரோக்கியமான உறவுகள் எதிர்காலத்தில் தடைபட்டுப் போகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.