மேட்டூர் காவிரி கரை அகழாய்வில் கீழடி போல பழமையான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு | excavation in mettur cauvery basin will be held soon
மேட்டூர்: மேட்டூர் அடுத்த தெலுங்கனூரில் நடத்தப்பட்ட ஆய்வில் 3,500 ஆண்டுகள் பழமையான எஃகினால் செய்யப்பட்ட வாள் கிடைத்த நிலையில், கீழடி, சிவகளை போல பழமையான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெலுங்கனூர் பகுதியில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2025-2026-ன் படி அகழாய்வு மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் தெலுங்கனூர் உள்ளது. இந்தப் இடம் 1990-ம் ஆண்டு வரை அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. பின்னர், வனப்குதி அழிந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேட்டூர் அணை நீர்மட்டம் சரியும் போது, அப்பகுதியில் ஏராளமான புதைகுழிகள் இருப்பதை காண முடியும். தெலுங்கனூரை சுற்றி அதிகளவில் கல் வட்டங்கள் உள்ளன.
இந்த கல் வட்டங்களை உள்ளூர் மக்களால் பாண்டியன் திட்டுகள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில் வாள், அம்பு, முதுமக்கள் தாழி, பெரிய மற்றும் சிறிய அளவிலான பானை மற்றும் கருவிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளித்தன் பேரில் தமிழக அரசு அப்பகுதியில் முறையான அகழாய்வு செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இது குறித்து மேட்டூர் அடுத்த கருங்கலூரை சேர்ந்தவரும், இந்திய தொல்லியல் துறை ஆய்வாளரான ரமேஷ் கூறியது: “இறந்து போனவர்களின் உடல்களை தடிமான சுடு மண் பானைகளில் வைத்து நிலத்தில் குழி தோண்டி புதைத்து விடுவார்கள். இது முதுமக்கள் தாழி என அழைக்கப்படுகிறது. இந்த முதுமக்கள் தாழியில் இறந்த போனவர்களின் உடல்கள் மட்டுமின்றி பயன்படுத்தி வந்த பொருட்களையும் சேர்த்து புதைக்கப்படும். இதனை சுற்றி கற்களை பதித்து வைப்பதால், கல் வட்டங்கள் (பாண்டியன் திட்டு) என அழைக்கப்படுகிறது.
இறந்தவர்களை அடக்கம் செய்ய 3 முறைகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியும் ஒன்று முதல் 6 மீட்டர் இடைவெளியில் இருக்கும். 2 முதல் 10 மீ வரை மாறுபடும். 2 முதல் 4 மீ விட்டம் கொண்ட கல் வட்டங்களில் பொதுவாக குழி அடக்கம் உள்ளது. 5 மீ மற்றும் அதற்கு மேற்பட்ட விட்டம் கொண்ட பெரிய வட்டங்களில் கற்பதுக்கை உள்ளது. இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட கல் வட்டங்கள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து பெரிய அளவிலான வாள், முதுமக்கள் தாழி, பானை, கல் கருவிகள், இரும்பு கருவிகள் உள்ளிட்டவை கிடைத்தன.
இதில் பெரிய அளவில் கிடைத்த வாளை ஆய்வு செய்த போது, சுமார் 3,500 ஆண்டு பழமையானது மற்றும் எஃகுளானது எனவும் தெரியவந்தது. மேலும், வாளில் கார்பன் இருப்பதும் தெரிந்தையடுத்து, ஆய்வு செய்து அதற்கான காலத்தை கண்டறிந்தோம். அப்பகுதியில் கிடைத்த அம்பு 3,100 ஆண்டு பழமையானது. மாங்காட்டில் கிடைத்த இரும்பு பொருள் 3,600 ஆண்டுகள் பழமையானது. இந்த பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு கல் வட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது, கிடைத்த பொருட்களை வைத்து பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் மற்றும் இரும்பு கால மனிதர்கள் வாழ்ந்ததும் தெரியவந்தது. மேலும், புதிற கற்கால மற்றும் இரும்பு கால மனிதர்கள் பொருட்களும் கிடைத்துள்ளன. தெலுங்கனூர் நடத்தப்படும் அகழாய்வு மூலம் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வரலாறு, பொருட்கள் உள்ளிட்ட கிடைக்கும். அதேபோல் பண்ணவாடி, மாங்காடு, மூலக்காடு, வெள்ளகரட்டூர், காரைக்காடு, கோரபள்ளம், கொளத்தூர் ஆகிய பகுதியில் ஏராளமான கல் வட்டங்கள் உள்ளன.
ஏற்காட்டில் கடந்த 1883-ம் ஆண்டு பிலிப்ஸ் என்பவர் அகழாய்வு மேற்கொண்டார். ஆனால், அது முறையான அகழாய்வு இல்லை. சேலம் மாவட்டத்தில் தெலுங்கனூரில் முறையாக நடத்தப்படும் அகழாய்வு இது தான். அணை நீர்மட்டம் குறைந்த பிறகு, அப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, மத்திய மற்றும் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்யப்படும். பின்னர், அரசு அனுமதி பெற்ற பிறகு முறையாக அகழாய்வு நடத்தப்படும். இதன் முலம் பல்வேறு வரலாறு, வாழ்க்கை முறை உள்ளிட்டவை தெரிய வரும்” என்று அவர் கூறினார்.