பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய இரு கூறல் மீன்கள்: ரூ.1,27,500-க்கு விற்பனை! | Kooral Fish caught in Pamban fisherman’s net: Sold for Rs. 1,27,500!
ராமேசுவரம்: பாம்பன் மீனவர் வலையில் அரிய வகையான கூறல் மீன்கள் இரண்டு சிக்கின. 51 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் ரூ.1,27,500-க்கு விற்பனையானது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியிலிருந்து செவ்வாய்கிழமை 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பின்னர் மீன்பிடித்து விட்டு இன்று (மார்ச் 12) காலை மீனவர்கள் கரை திரும்பினர். இதில் மீனவர் வலையில் 22 கிலோ மற்றும் 29 கிலோ எடையில் இரண்டு கூறல் மீன்கள் சிக்கின. சுமார் 51 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் கிலோ ரூ. 2,500 வீதம், ரூ.1,27,500-க்கு ஏலம் போனது.
கூறல் மீன் குறித்து பாம்பன் மீனவர்கள் கூறியது: “இந்த கூறல் மீனை உணவுக்காக பயன்படுத்துவதில்லை. கூறல் மீனின் வயிற்று பகுதியில் காற்றுப்பை ரப்பர் டியூப் போன்ற வடிவத்தில் (fish maws) நெட்டி காணப்படும். இந்த நெட்டியை பீர், ஒயின் போன்ற மது பானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய் போன்றவைகளில், சுவைக்காகவும், கெட்டு போகாமல் இருக்கவும் பயன்படுத்துகின்றனர். கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நெட்டிகளைக் கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்கப்படுகிறது,” என்றனர்.