Fatty Liver: இயற்கை முறையில் எளிய தீர்வுகள் என்னென்ன? | simple natural remedy for Fatty Liver health issue
நாம் பின்பற்றும் உணவு முறையின் தாக்கத்தால் சாதாரணம் ஆகிவிட்ட ‘ஃபேட்டி லிவர்’ பிரச்சினையில் இருந்து இயற்கை மருத்துவ முறையில் மீள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறார், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் யோ.தீபா…
“நம் கல்லீரலில் கொழுப்பு தங்குவதுதான் ஃபேட்டி லிவர். இதில் கிரேடு 1, கிரேடு 2, கிரேட் 3 என்ற மூன்று நிலைகள் உள்ளன. இதில் முதலாவது ஸ்டேஜ் என்பது பெரிதாக பிரச்சினை இல்லாதது. உடல் பருமன் போன்றதுதான் இதுவும். ஆனால், இந்த நிலையைத் தாண்டிப் போக ஆரம்பிக்கும்போது நம் கல்லீரலில் கொழுப்புத் தன்மை தங்கும்.
கொழுப்புக் கல்லீரலுக்கு இரண்டு வகைகள் உள்ளன. குடிப்பழக்கத்தால் ஏற்படும் வகை ஒன்று, குடிப்பழக்கம் இல்லாமல் ஏற்படுவது வகை இரண்டு. தினசரி குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு நிச்சயமாக கொழுப்புத் தன்மையான லிவர் இருக்கும். அதேவேளையில், குடிப்பழக்கம் இல்லாதவருக்கு கொலஸ்ட்ரால் காரணமாக இருக்கும்.
தற்போதைய சூழலில், ஃபேட்டி லிவர் பிரச்சினை உள்ளவர்களில் 70% பேர் உடல் பருமன் கொண்டவர்களாகவே இருப்பதை கவனிக்க முடிகிறது. இதை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், கல்லீரலில் இந்த இன்ஃப்ளமேஷனை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். எனவே, நம் உடல் பருமனை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையையும் கட்டுப்படுத்துவது அவசியம். ஏனெனில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் முதலான பிரச்சினைகளும் ஏற்படும் அபாயம் உண்டு.
ஃபேட்டி லிவர் பிரச்சினையை இயற்கை முறையில் குணப்படுத்துவது எளிதுதான். ஆனால், ஃபேட்டி லிவர் சிறிதாக இருக்கும்போதே, அதை சரி செய்ய முயல்வது நல்லது. குறிப்பாக, கிரேட் 1 மற்றும் கிரேட் 2-ல் இருப்பவர்களை வெகுவாக குணப்படுத்தலாம். பொதுவாக, கிட்னியில் பிரச்சினை இருப்பவர்கள், பித்தப்பை கல் பிரச்சினை இருப்பவர்களுக்கும் ஃபேட்டி லிவர் பிரச்சினை இருக்க வாய்ப்பு அதிகம்.
இதில் நான் பார்த்த வரையில் நிறையப்பேருக்கு கிரேட் 2-ல் இருந்து கிரேட் 1-க்கு வந்துள்ளனர். கிரேட் 1-ல் இருந்தவர்கள் குணமடைந்துள்ளனர். சிறுநீரக பிரச்சினை, பித்தப்பை கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு இருப்பதை 90 சதவீதம் பார்க்க முடிகிறது. இது இரண்டுக்குமே தனித்தனி சிகிச்சை இல்லை ஒரே மாதிரியான சிகிச்சைதான்.
சரியான உடற்பயிற்சி மேற்கொள்வது, தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது, யோகா பயிற்சி செய்வது, மனதை சாந்தப்படுத்துவது போன்றவை மிக மிக அவசியம். எப்போதும் பதற்றமாக இருப்பது, அதிகம் காரமான உணவுகளை சாப்பிடுவது, அதிகமான எண்ணெய் பொருள் சாப்பிடுவது போன்றவைதான் குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் ஃபேட்டி லிவர் பிரச்சினை வர காரணமாக இருக்கின்றன.
உடல் பருமன் இருந்தால் மட்டும்தான் ஃபேட்டி லிவர் பிரச்சினை வரும் என்பது இல்லை. ஒல்லியாக இருப்பவர்களுக்கும் ஃபேட்டி லிவர் பாதிப்பு வரலாம். இதற்கு மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் யோகா உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது நன்மை பயக்கும். ஃபேட்டி லிவரை கட்டுப்படுத்துவதற்கு துணைபுரியும் யோகாசனங்களை உரிய பயிற்சியாளர்களிடம் இருந்து பயிற்சி பெற்று, அதை தொடர்ந்து செய்வது நல்லது.
கொழுப்புத் தன்மையை சரியாக ஜீரணிக்க செய்தால், கொழுப்பு தங்குவதற்கான அவசியமே இல்லை. எப்போது பார்த்தாலும் பஜ்ஜி, போண்டா, சமோசா சாப்பிடுவது, பரோட்டா முதலான மைதா பொருட்களை எடுத்துக்கொள்வது, நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடுவது போன்ற உணவுப் பழக்கங்களே ஃபேட்டி லிவர் வருவதற்கு முக்கிய காரணங்கள்.
கொழுப்புக் கல்லீரல் பிரச்சினை இருப்பின், உரிய இயற்கை மருத்துவர்களை அணுகி சரியான மசாஜ் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம். மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் இயற்கை உணவை எடுத்துக்கொள்வதும் சிறந்த வழியே.
இயற்கை மருத்துவத்தில் இடுப்புக் குளியல் என்று ஒன்று உள்ளது. Gastro-hepatic Pack (GH pack) எனும் வெந்நீர் பையை இடுப்புக்கு மேலேயும், ஐஸ் பையை இடுப்புக்குக் கீழேயும் வைத்து 45 நிமிடம் இடுப்பில் கட்டிவிட்டால், இடுப்பில் இருக்கும் இந்தக் கொழுப்பு அனைத்தும் குறைந்து விடும். ஆனால், இந்த முறையை இயற்கை மருத்துவரின் வழிகாட்டுதலுடன்தான் செய்ய வேண்டும்.
பழங்கள், காய்கறிகளுடன் சரியான உணவு முறையைப் பின்பற்றி, தினசரி எளிதான உடற்பயிற்சி, நடைபயிற்சிகளை செய்து வந்தாலே ஃபேட்டி லிவர் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்” என்கிறார்.
– கிரேஸ், இதழியல் மாணவர்