EBM News Tamil
Leading News Portal in Tamil

சமூக வலைதளங்கள், செல்போனால் பாதிப்பு: பள்ளி குழந்தைகளிடம் தன்னம்பிக்கை அவசியம்: மருத்துவர் சி.பழனிவேலு அறிவுரை | Self-confidence is essential for school children: Doctor


சமூக வலைதளங்கள், செல்போன், டிவி போன்றவற்றால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று சுயசரிதை புத்தகம் அறிமுக விழாவில் ஜெம் மருத்துவமனைகள் குழும தலைவர் சி.பழனிவேலு தெரிவித்தார்.

மருத்துவ துறையில் மிகப்பெரிய உயரத்தை எட்டியுள்ளவர் ஜெம் மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர், தலைவரான மருத்துவர் சி.பழனிவேலு. நாமக்கல் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், பல்வேறு சவால்கள், தடைகளை கடந்து சாதனை படைத்தவர். உலக புகழ்பெற்ற லேப்ராஸ்கோபி, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான பழனிவேலு, இந்தியாவில் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான டாக்டர் பி.சி.ராய் விருதை 2 முறை பெற்றுள்ளார். இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு, செம்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களின் கவுரவ டாக்டர் பட்டம், புற்றுநோய் சிகிச்சைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது என பல்வேறு விருதுகள், கவுரவங்களை பெற்றவர்.

இவர் ‘GUTS’ எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய சுயசரிதை புத்தகம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. தொடர்ந்து அந்த புத்தகம் தமிழில் ‘எதுவும் இன்றி’ என்ற தலைப்பிலும், தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சி.பழனிவேலுவின் சுயசரிதை புத்தகம் அறிமுக விழா சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நேற்று நடைபெற்றது. விழாவில் அவர் பேசியதாவது: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ‘‘என்னைவிட, உங்கள் வாழ்க்கை கதை மிக சிறப்பாக உள்ளது. அதை சுயசரிதையாக எழுதுங்கள். அது கட்டாயம் குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கும்’’ என்று கலாம் கூறினார். அதை மனதில் கொண்டு, பல ஆண்டுகளாக முயற்சி செய்து, எனது சுயசரிதையை எழுதி புத்தகமாக வெளிக்கொண்டு வந்துள்ளேன்.

சமூக வலைதளங்கள், செல்போன், டிவி போன்றவை பள்ளி குழந்தைகளை பெரிதும் பாதிக்கின்றன. வீடுகளில் பெற்றோரும், பள்ளிகளில் ஆசிரியர்களும் குழந்தைகளிடம் பேசுவது குறைந்துள்ளது. இதனால், குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுவது தடைபடுகிறது. கலாம் சொன்னபடி, இந்த புத்தகத்தை பள்ளி குழந்தைகளிடம் கொண்டு செல்ல நினைக்கிறேன். அரசு பள்ளிகளுக்கு இதை இலவசமாக கொடுப்பதற்காக, அரசிடம் கடிதம் கொடுத்துள்ளேன். நீங்களும் விரும்பினால், படித்த பள்ளிக்கு இதை கொடுக்கலாம். குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

மெட்ராஸ் காது, மூக்கு தொண்டை (இஎன்டி) ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மோகன் காமேஸ்வரன் பேசும்போது, ‘‘நானும், பழனிவேலுவும் பியூசி ஒன்றாக படித்தோம். அவர் கஷ்டப்பட்டு, கடினமான சூழ்நிலைகளை தாண்டி வந்தவர். ‘சரஸ்வதியின் பின்னால் போனால் லட்சுமி வாலை சுருட்டிக் கொண்டுவரும்’ என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதற்கு சிறந்த உதாரணம் பழனிவேலு. வாழ்க்கையில் கடினமான சமயங்களில் கல்வியை (சரஸ்வதி) நோக்கி சென்ற பழனிவேலுவின் பின்னால் செல்வம் (லட்சுமி) வந்தது” என்றார்.

முன்னதாக, ஜெம் மருத்துவமனை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.அசோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். பழனிவேலுவின் வாழ்க்கை மற்றும் சுயசரிதை புத்தகம் குறித்து பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், எழுத்தாளர் த.ஸ்டாலின் குணசேகரன் ஆகியோரும், அவரது மருத்துவ பணி குறித்து லேப்ராஸ்கோபி – பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் டி.லஷ்மிகாந்தும் பேசினர்.

சுயசரிதை புத்தகம் வெளிவர உதவியவர்கள், சிறப்பு விருந்தினர்களை பழனிவேலு கவுரவித்தார். விழாவில் அவரது மனைவி ஜெயா பழனிவேலு, மருத்துவர்களான மகன் பி.பிரவின்ராஜ், மகள் சங்கீத பிரியா, மருமகன் பி.செந்தில்நாதன் மற்றும் கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், திரைத் துறையினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.