தேசம் விடுதலை பெற்றதை வானொலியில் அறிவித்த தமிழ் செய்தி வாசிப்பாளர் காலமானார்! | Tamil newsreader who announced independence of india on radio passed away
சென்னை: கடந்த 1947, ஆகஸ்ட் 16-ம் தேதி அன்று காலை 5.45 மணி அளவில் ‘ஆல் இந்தியா ரேடியோ’வில் இந்திய தேசம் விடுதலை பெற்றதை தமிழ் மக்களுக்கு அறிவித்த செய்தி வாசிப்பாளரான ஆர்.எஸ்.வெங்கட்ராமன் காலமானார். அவருக்கு வயது 102.
சுமார் 70, 80 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வானொலி மற்றும் செய்தித்தாள்கள் தான் இந்திய மக்களுக்கு பல்வேறு செய்திகளை வெளியிட்டு வந்தது. அது வானொலியின் பொற்காலம் என்றும் சொல்லலாம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து தேசம் சுதந்திரம் காண வேண்டுமென விடுதலை போராட்டங்கள் நடைபெற்ற சூழலில் இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள் விடுதலை கொடுத்தனர். அந்த பொன்னான செய்தியை லட்சோப லட்ச தமிழர்களுக்கு தனது குரல் மூலம் அறிவித்தவர் ஆர்.எஸ்.வெங்கட்ராமன்.
அவரது மகள் மனோரமா கணேஷ்குமார், தன் அப்பாவின் மறைவு செய்தியை உறுதி செய்துள்ளார். சென்னை – மந்தைவெளியில் உள்ள இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது உயிர் பிரிந்தது.
மன்னார்குடிக்கு அருகிலுள்ள ராதா நரசிம்மபுரத்தில் கடந்த 1923, ஏப்ரல் 14-ம் தேதி ஆர்.எஸ்.வெங்கட்ராமன் பிறந்தார். அவரது அப்பா ஆசிரியராக பணியாற்றியவர். பள்ளிப் படிப்பை முடித்ததும் டெல்லிக்கு அவர் சென்றுள்ளார். அங்கு ஆல் இந்தியா ரேடியோவில் மொழிபெயர்ப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளராக 1945-ல் பணியை தொடங்கி உள்ளார். ஆல் இந்தியா ரேடியோவின் தென்கிழக்கு ஆசிய சேனலில் தேசம் விடுதலை பெற்ற தெரிவித்துள்ளார்.
ஓய்வுக்கு பிறகும் தனது 86-வது வயது வரையில் செய்தி பிரிவில் அவர் பணியாற்றி உள்ளார். ‘அருமையான மனிதர் மற்றும் சிறந்த குரல் வளம் கொண்டவர்’ என அவரை போற்றுகிறார் அவருடன் பணியாற்றிய ஒருவர். அவர் கஜமுகன் என்ற பெயரில் தமிழ் சிறுகதைகளையும் எழுதி உள்ளார் என்கிறார் அவரது மருமகள் ஸ்ரீமதி ரவிச்சந்திரன்.