EBM News Tamil
Leading News Portal in Tamil

பாரம்பரிய வாகன கண்காட்சி: நேரு, காமராஜர் பயணித்த காரில் அமர்ந்து ரசித்த புதுச்சேரி ஆளுநர்! | Puducherry Governor enjoys sitting in the car used by Nehru and Kamaraj!


புதுச்சேரி: புதுச்சேரியில் பாரம்பரிய பழைமையான கார்கள், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி இன்று (பிப்.3) நடைபெற்றது. இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்த மறைந்த பிரதமர் நேரு, காமராஜர் ஆகியோர் பயணித்த காரில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அமர்ந்து ரசித்தார்.

புதுவை அரசின் சுற்றுலாத் துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் கார்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டுக்கான கார்கள்,இருசக்கர வாகன கண்காட்சியானது கடற்கரைச் சாலையில் இன்று மாலை நடைபெற்றது. இதில் 35-க்கும் மேற்பட்ட பழமையான பாரம்பரிய கார்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் 15-க்கும் மேற்பட்ட பழமையான இருசக்கர வாகனங்களும் இடம் பெற்றிருந்தன.

கார் கண்காட்சியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன், சுற்றுலாத்துறை செயலர் ஜெயந்த குமார் ரே ஆகியோர் பங்கேற்றனர். கண்காட்சியில் இடம்பெற்றிருந்த கார்களை துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் வரிசையாக பார்வையிட்டனர்.

அப்போது தென்னிந்திய அளவில் முதல் சவ்ரலட் வகை கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ராஜேஷ் அம்பால் என்பவர் அதை காட்சிப்படுத்தியிருந்தார். கடந்த 1939-ம் ஆண்டு வாங்கப்பட்ட அந்தக் கார் மதுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரில் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, தமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் ஆய்வுக்கான பயணத்தை மேற்கொண்டதாக ராஜேஷ் அம்பால் தெரிவித்தார்.

அதையடுத்து அந்த காரின் பின்பக்க இருக்கையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அமர்ந்தார். அப்போது ஓட்டுநர் இருக்கையில் பேரவைத் தலைவர்செல்வம் அமர்ந்தார். ஆளுநர் அருகே முதல்வர் ரங்கசாமி அமர முயற்சித்து பின் வெளியே வந்துவிட்டார்.கார்களின் பழமை பாரம்பரியம், அவை பயன்படுத்தப்பட்ட ஆண்டு ஆகியவை அந்தந்த கார் அருகே தகவலாக வைக்கப்பட்டு, உரிமையாளர்களால் சிறப்பு விருந்தினர்களுக்கு விளக்கப்பட்டது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கார்களைப் பார்வையிட்டனர்.

பராமரிப்பு செலவு அதிகம்- விலைமதிப்பில்லாதவை: பழங்கால கார்களின் உரிமையாளர்கள் கூறுகையில், “பழங்கால காரின் மதிப்பு குறித்து கூறுவது கடினம். விலைமதிப்பில்லா பொக்கிஷம். முக்கியமாக இதை பராமரிப்புக்கான செலவும் அதிகம். குளிர்சாதன வசதியும் இருக்காது. முக்கியமாக பழுதானால் பொருட்கள் கிடைக்காது. நாமேதான் உருவாக்க வேண்டும். முக்கியமாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வாகனத்தை இயக்குவது அவசியம். உடனே ஸ்டார்ட் ஆகாது. சிறிது நேரம் ஆகும். குழந்தைபோல் பார்த்துக்கொள்வது அவசியம். ஆர்வமும், ரசனையும் தான் இதில் மிக முக்கியம்.” என்றனர்.