EBM News Tamil
Leading News Portal in Tamil

நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநர் நியமனம்! | Appointed the first female conductor in nilgiris


கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. இவரது கணவர் கருப்பசாமி. இவர்களுக்கு யுகேஜி படிக்கும் சஷ்டிகா மற்றும் காருண்யா (2) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். கோவை மண்டலத்தின் கோத்தகிரி கிளையில் நடத்துநராக கருப்பசாமி பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், மாரடைப்பால் அவர் உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் வேலை கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சுகன்யா கோரிக்கை மனு அனுப்பினார். அதில், ஓட்டுநர் பணி தவிர்த்து வேறு எந்த பணி வழங்கினாலும் சிறப்பாக மேற்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, சுகன்யாவுக்கு கருணை வேலை வழங்க போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு முதல்வர் பரிந்துரைத்தார். அதன்படி, சுகன்யாவின் கல்வித் தகுதிக்கேற்ப அவருக்கு உடனடியாக கருணை பணி வழங்க, போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கோவை கோட்டம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிளையில் நடத்துநராக சுகன்யா பணியில் சேர்ந்துள்ளார். கோத்தகிரி பேருந்தில் நடத்துநர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் செல்வம் மற்றும் அதிகாரிகள் சுகன்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து சுகன்யா கூறும்போது, “கணவர் இறந்த நிலையில் குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தேன். எனது கோரிக்கை குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. கணவர் ஓட்டுநராக பணிபுரிந்த கிளையிலேயே எனக்கு பணி கிடைத்துள்ளது. பெண்களால் அனைத்து பணிகளையும் திறம்பட செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக என் பணி இருக்கும். என்னைப் போல் பெண்கள் ஏராளமானோர் நடத்துநர் பணியில் சேர முன்வர வேண்டும்” என்றார்.