EBM News Tamil
Leading News Portal in Tamil

உணவு சுற்றுலா: வட்டவடா ஸ்ட்ராபெர்ரி | kerala’s vattavada strawberry


ஸ்ட்ராபெர்ரி பழங்களை அவை வளரும் தோட்டத்திலேயே நேரடியாகப் பறித்துச் சாப்பிட ஆசையா? அப்படியென்றால் நீங்கள் பயணப்பட வேண்டியது வட்டவடாவுக்கு! கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் வட்டவடா, தமிழ்நாட்டுக்கு வெகு அருகில்தான் இருக்கிறது.

கொடைக்கானலுக்கும் வட்டவடாவுக்கும் காட்டுவழியில் தூரம் முப்பது முதல் நாற்பது கிலோமீட்டர்தான். ஆனால், சாலை மார்க்கமாகப் பயணம் செய்தால் மூணாறு வழியாகத்தான் வட்டவடாவுக்குச் செல்ல முடியும். மூணாறிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது வட்டவடா. கேரளத்தின் அழகிய கிராமங்களில் வட்டவடாவும் ஒன்று. ‘கேரளத்தின் காய்கறி தோட்டம்’ என்கிற சிறப்புப் பெயரும் இதுக்கு உண்டு.

மூணாறிலிருந்து பம்படம் (Pampadum) வனவிலங்கு சரணாலயத்துக்குள் நுழைந்துதான் வட்டவடாவுக்குச் செல்ல முடியும் என்பதால் செல்லும் வழியெங்கிலும் கண்களுக்கு விருந்துதான்.

இருபுறமும் தென்படும் வானுயர்ந்த மரங்கள் புதுமையான பயண அனுபவத்தைக் கொடுக்கும். கண்களுக்குள் பசுமையைப் படரச் செய்யும் தாவரங்களையும் மரங்களையும் கொண்ட பாதை, நம்மை வட்டவடாவுக்குள் அழைத்துச் செல்லும். அடுக்கடுக்காக விவசாய நிலங்கள். நிலத்தைச் சிற்பமாகச் செதுக்கி அதில் காய் மற்றும் பழ ரகங்களைப் பொம்மைகளாகப் பொருத்தி வைத்தது போன்றதொரு தோற்றம். வட்டவடா பார்வைப் பகுதியிலிருந்து தென்படும் காட்சி இது! மழைக்காலமாக இருப்பின் ஆங்காங்கே வழிந்துகொண்டிருக்கும் அருவிகள், வட்டவடாவுக்கு மேலும் அழகூட்டும்!

வட்டவடாவில் இருக்கும் சூழல் தளங்களை ரசித்துவிட்டு, அங்கு பிரசித்திப் பெற்ற ஸ்ட்ராபெர்ரி தோட்டங்களைப் பார்க்கலாம் என்று கிளம்பினோம். பல்வேறு மலைப் பகுதிகளில் கேரட், பீட்ரூட் போன்ற தாவரங்களைப் பார்த்துப் பழகிய நமக்கு, ஸ்ட்ராபெர்ரி தோட்டங்களைக் கண்டதும் உற்சாகம் அதிகமானது. மலையிலிருந்து பார்க்கும்போது பல்வேறு ஸ்ட்ராபெர்ரி தோட்டங்கள் தெரிந்தன. பெரிய தோட்டத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார் வழிகாட்டி.

’ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உங்களை வரவேற்கின்றன’ எனும் பதாகை எங்களை வரவேற்றது. திரும்பிய இடமெல்லாம் ஸ்ட்ராபெர்ரி செடிகள்! பச்சை இலைகளுக்குள் கோவைப் பழச் சிவப்பாகத் காய்த்திருந்த பழங்களைப் பார்க்கக் கவித்துவமாக இருந்தது. சிவந்த பழங்களில் நேர்த்தியாகப் புள்ளிகளை வைத்திருந்தது இயற்கை. அப்படியே கைகளில் அள்ளிக்கொள்ளலாமா என்று தோன்றியது.

நமக்குத் தேவைப்படும் பழங்களை அங்கிருக்கும் பணியாளர்கள் பறித்துக் கொடுக்கிறார்கள். மேலைநாடுகளில் பழங்கள், காய்களைப் பறிப்பது ஒரு பொழுதுபோக்கு! ஸ்ட்ராபெர்ரியின் விலை கிலோ 400 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சுவையோ அட்டகாசமாக இருந்தது.

ஜாம்… ஒயின்…

ஸ்ட்ராபெர்ரி பழங்களை வைத்து மதிப்புக்கூட்டுப் பொருள்களாக ஜாம், ஒயின் அங்கு விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன. அங்கேயே ஜாமைச் சாப்பிடவும் கொடுக்கிறார்கள். அருமையாக இருந்தது. ஸ்ட்ராபெர்ரி, சர்க்கரை, தேன் கலந்து ஜாம் தயாரிக்கப்படுகிறது. நாம் பல ஆண்டுகளாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஸ்ட்ராபெர்ரி எஸன்ஸ் சேர்த்த ஐஸ்க்ரீமின் சுவைக்கும், ஒரிஜினல் ஸ்ட்ராபெர்ரியின் சுவைக்கும் வித்தியாசம் இருக்கிறது.

எவ்விதப் பதப்படுத்திகளும் சேர்க்கப்படாததால் குழந்தைகளுக்குத் தாராளமாகக் கொடுக்கலாம்.

வெவ்வேறு பருவக் காலங்களில் காய்க்கும் ஸ்ட்ராபெர்ரி ரகங்கள் அங்கு விளைகின்றன. சுவை அடிப்படையில் இனிப்பு, கொஞ்சம் புளிப்பு கலந்த இனிப்பு ரகங்கள் கிடைக்கின்றன. வடிவங்களிலும் கொஞ்சம் மாறுபாடு கொண்ட ரகங்களும் உண்டு. மே, ஜூன் மாதம் தவிர மற்ற எல்லா மாதங்களிலும் பழங்களின் விளைச்சலைப் பார்க்கலாம். ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு கூடுதல் விளைச்சல் இருக்குமாம்.

ஸ்ட்ராபெர்ரியின் பயன்கள்

ஸ்ட்ராபெர்ரி உடலுக்கு மிகுந்த ஊட்டச்சத்து தரக்கூடியது! பழங்களைப் பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து பழச்சாறாகப் பருக, உடலுக்கு உடனடி ஆற்றல் சுவையாகக் கிடைக்கும். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த உதவும்.

நேரடியாக விளையும் இடத்துக்கே சென்று தாவரங்களிலிருந்து ஸ்ட்ராபெர்ரிகளைப் பறித்துச் சாப்பிடுவது சுகமான அனுபவம்! வட்டவடாவுக்கு இப்போதே திட்டமிடுங்கள்.

கட்டுரையாளர், சித்த மருத்துவர்.