மூட்டு வலியை இனி சகித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை: எலும்பு மூட்டு மாற்றுக்கு நவீன ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சை! | about robotic surgery for bone joint replacement was explained
எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைக்கு ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மெரில் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு பிரிவு தலைவர் சோஹில் சர்காசி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான ‘மெரில்’ பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இதயவியல், எலும்பியல், அறுவை சிகிச்சை மற்றும் நோய் கண்டறிதல் துறைகளில் அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்ப கருவிகளை தயாரித்து வருகிறது. இதய ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, இதய வால்வு செயலிழப்பு போன்ற பாதிப்புகளுக்கு இடையீட்டு சிகிச்சை மூலம் தீர்வளிக்கும் பலூன் உபகரணங்கள், டாவி உபகரணங்கள், நவீன ஆஞ்சியோபிளாஸ்டி உபகரணங்களை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைகளுக்காக ‘மிஸோ’ எனப்படும் காம்பேக்ட் வகை தானியங்கி ரோபோடிக்ஸ் இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறது. இதற்காக மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் மெரில் நிறுவனத்தின் புதிய ரோபோடிக்ஸ் ஆலை குஜராத் மாநிலம், வாபி நகரில் கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இதை பிரதமர் மோடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
மொத்தம் ரூ.1,400 கோடி முதலீட்டில் 40 ஆயிரம் சதுர அடியில் நிறுவப்பட்டுள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டு வரும் காம்பேக்ட் வகை ரோபோக்கள் மருத்துவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த ரோபோக்கள், சி.டி.ஸ்கேன் தரவுகளை பகுப்பாய்வு செய்து, மருத்துவர்களின் உள்ளீடுகளுக்கு ஏற்ப துல்லியமாக அறுவை சிகிச்சையை செய்து முடிக்கின்றன.
இந்த வகை ரோபோக்கள் தமிழகத்தில் மதுரை, நாமக்கல் உட்பட இந்தியா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து முழங்கால், இடுப்பு, எலும்புமுறிவு, முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் ரோபோக்களை பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை மெரில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் மக்கள் தொடர்பு பிரிவு தலைவர் சோஹில் சர்காசி கூறியதாவது:உலகளவில் இந்தியாவில்தான் மூட்டு வலியால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அதாவது ஆண்டுக்கு 35 லட்சம் பேர் அவதிப்படுகின்றனர். ஆனால் இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் வெறும் 5 லட்சம் பேர் மட்டுமே. காரணம், சிகிச்சைகான செலவு மட்டுமல்லாமல் பயமே முக்கிய காரணமாக இருக்கிறது.
முந்தைய காலங்களில் மூட்டு பிரச்சினைகளுக்கு மேற்கத்திய நாடுகளின் உடல்வாகு ஏற்ப மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் குணமாக நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. சிகிச்சைக்கான பலன்களும் வெற்றிகரமாக இல்லை. இதனால் மக்கள் மூட்டு வலி வந்தால் சகித்துக்கொண்டு வாழ பழகிவிட்டனர்.
இன்றைக்கு சூழல் மாறியிருக்கிறது. தேவைக்கேற்ப மருத்துவக் கருவிகள் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்படுகின்றன. ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் கருவிகள் மூலம் நடத்தப்படும் அறுவை சிகிச்சைகள் துல்லியமாக மேற்கொள்ளப்படுவதால் வலி, ரத்தப்போக்கு, எலும்புகள் சேதமடைவது குறைந்து, நோயாளிகள் விரைவாக குணமடைகின்றனர்.
இன்றைக்கு இந்தியாவில் மொத்தமாக 6 கோடி பேர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மக்களிடையே ரோபோடிக்ஸ் மற்றும் நவீன தொழில்நுட்ப அறுவை சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதை கவனத்தில் கொண்டு 800 நகரங்களில் மெரில் நிறுவன விற்பனையாளர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தகட்டமாக தொற்று கட்டுப்பாடு, நரம்பியல், புற்றுநோயியல் துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம். கோவை, மதுரை போன்ற மற்ற இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகர மக்களுக்கும் சென்னை போன்ற பெருநகரங்களில் கிடைக்கும் வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.
– குஜராத்தில் இருந்து ம.மகாராஜன்