100 பெண்களின் கும்மியாட்டம்: பஹ்ரைனில் களைகட்டிய அன்னை தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா கொண்டாட்டம்! | Bahrain Annai Tamil Mandram Pongal celebration
பஹ்ரைன்: பஹ்ரைனில் பல்வேறு சமூக சேவைகள் செய்துவரும் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பில், பொங்கல் திருநாள் கடந்த ஜன.24-ம் தேதியன்று, இந்தியன் கிளப் வளாகத்தில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
இது தொடர்பாக பஹ்ரைன் அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் ஜி.கே.செந்தில் பகிர்ந்த தகவல்கள்: இந்த விழாவில், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கதிரவனுக்கு நன்றி சொல்லும் விதமாக புதுப்பானையில் புத்தரிசியிட்டு, வாழை தோரணங்கள் சூழ மகளிர் பொங்கல் வைத்து, குலவையிட்டு கொண்டாடி மகிழந்தனர். காண்போர் கண்கள் ரசிக்கும்படி பெண்களுக்கான கோலப்போட்டி, சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், உறியடித்தல், ஆண்கள் பெண்களுக்கான கயிறிழுக்கும் போட்டி என அனைத்திலும் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவின் சிறப்பம்சமாக 100 பெண்கள் ஒன்றுகூடி முளைப்பாரி வைத்து நடத்திய கும்மியாட்டம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. சிறுவர்களின் நடன நிகழ்ச்சிகள் கம்பத்தாட்டம், திரையிசை நடனம், ஆகியவை அனைவராலும் பெரிதும் ரசிக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக, பஹ்ரைன் அரசின் தகவல் துறை இயக்குனர் யூசுப் லோரி , பஹ்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் ஹுசைன் அல் ஜனாஹி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களை அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் ஜி.கே. செந்தில், பொதுச் செயலாளர் பழனிச்சாமி, பொங்கல் விழாவின் ஒருங்கினைப்பாளர் சுரேஷ் ஆகியோர் வரவேற்று சிறப்பித்தனர். மேலும்,கொடையாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் மூவாயிரம் மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அனைவருக்கும் வாழையிலையில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. பின்பு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.பெரியோர், சிறுவர் சிறுமியர், ஆடவர் மகளிர், இளைஞர்கள் என அனைத்து மக்களும் கலந்து கொண்டு அன்றைய நாளை திருவிழாவாக மாற்றினர். இந்த நிகழ்வின் மூலம், நமது தமிழ்ப் பண்பாட்டு சிறப்பை உலகறிய செய்ததில் அன்னை தமிழ் மன்றம் பெருமிதம் கொள்கிறது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.