EBM News Tamil
Leading News Portal in Tamil

மதுரை – விளாச்சேரியில் இருந்து கேரளா செல்லும் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள்! | Christmas Cribs from Madurai Vilacherry to Kerala!


மதுரை: கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகளை முழுவீச்சில் தயார் செய்து மதுரை விளாச்சேரியிலிருந்து கேரளாவுக்கு மண்பாண்டத் தொழிலாளர்கள் அனுப்பி வருகின்றனர்.

மதுரை அருகே விளாச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட மண்பாண்டக் கைவினைஞர்கள் குடும்பத்தினர் உள்ளனர். இங்கு களிமண் மண்பாண்டப்பொருட்கள், கலைநயமிக்க பொருட்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். பருவ காலத்துக்கு ஏற்றவாறு மண்பாண்டப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி கொலு பொம்மைகள், பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் என ஆண்டுதோறும் களிமண்ணால் ஆன பொருட்களை செய்து வருகின்றனர். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள் தயாரித்து அதிக அளவில் கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து விளாச்சேரியைச் சேர்ந்த ந.சீனிவாசன் கூறுகையில், “தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கிறிஸ்துமஸ் குடில்கள் தயாரித்து வருகிறோம். களிமண் மற்றும் வண்டல் மண் எடுப்பதற்கு வருவாய்த்துறையினர் கெடுபிடி காட்டுவதால் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் பொம்மைகள் தயாரித்து வருகிறோம். 3 இஞ்ச் முதல் 12 இஞ்ச் அளவுள்ள குடில் பொம்மைகள் தயாரித்து வருகிறோம்.ஒரு செட்டுக்கு 18 பொம்மைகள் இருக்கும். குழந்தையேசு, மாதா, சூசையப்பர், ஏஞ்சல், இடையர்கள், ராஜாக்கள், ஆடு, மாடுகள், கால்நடைகள் ஆகிய பொம்மைகள் இதில் அடங்கும்.

அளவுக்கேற்றவாறு குறைந்தது ரூ.120 முதல் ரூ.1800 வரை விலையில் விற்பனை செய்கிறோம்.மூலப்பொருட்களின் விலை, பெயிண்ட் ஆகியவைகள் கடுமையாக விலை உயர்ந்துள்ளன. இருந்தாலும் கடந்த ஆண்டைப்போலவே அதே விலைக்கே வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் கொடுத்து வருகிறோம்.

கேரளாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் விரும்பி வந்து வாங்கிச் செல்கின்றனர். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால் பொம்மைகள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம்,” என்றார்.