சர்க்கரை நோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுப்பது எப்படி? | How to prevent vision loss due to diabetes was explained
கோவை: இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ரெட்டினோபதி (சர்க்கரை நோய் கண்பாதிப்பு) பார்வை இழப்பிற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்பாடாக வைத்திருத்தல், முறையான கண் பரிசோதனை சிகிச்சை மூலம் பார்வை இழப்பைத் தடுக்கலாம் என கண் மருத்துவர் என்.சத்யன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவில் 2025-ல் மூன்றில் ஒரு பகுதி சர்க்கரை நோய் உள்ளவர்கள், கண் பாதிப்பால் கட்டாயமாக அவதிப்படுகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, கண்பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம். சர்க்கரை நோயால் பாதிப்பு ஏற்படும் கண் நோய்களின் தொகுப்பு ‘சர்க்கரை கண் நோய்’ என அழைக்கப்படுகிறது.
சர்க்கரை ரெட்டினோபதிரத்தத்தில் தொடர்ந்து சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் நிலையில், பார்வைக்கு உரிய விழித்திரையில் (Retina) சிறிய ரத்த நாளங்களில் சேதம் ஏற்படுவதால், திரவம் மற்றும் ரத்தக்கசிவு உண்டாகும். சர்க்கரை ரெட்டினோபதியை நான்கு நிலைகளாக பிரிக்கலாம். லேசான நோய் குறியீட்டான ரெட்டினோபதி (Mild Non Proliferative Retinopathy), மிதமான நோய் குறியீட்டான ரெட்டினோபதி (Moderate NPDR), கடுமையான சர்க்கரை ரெட்டினோபதி (Severe NPDR), புரோலிபெரேட்டிவ் டயாபெடிக் ரெட்டினோபதி (PDR) ஆகும்.
சர்க்கரை கண் பரிசோதனை: 12 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு வருடத்திற்கு ஒரு முறை கண் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். கண் பார்வை பரிசோதனை (விஷுவல் அக்யுட்டி), கண் நீர் அழுத்தம் (டோனோமெட்ரி வாயிலாக) விழித்திரை பரிசோதனை, ஒளியியல் ஒத்திசைவு பூமி (OCT), ரத்தக் கசிவை கண்டறிய பிளூரோசிஸின் ஆஞ்சியோகிராம் ஆகியவற்றை செய்ய வேண்டும்.
ஒரு விரிவான கண் விழித்திரை பரிசோதனை மிக முக்கியம். அதில் ரத்த நாளங்களின் மாற்றங்கள், கொழுப்பு வைப்பு போன்ற கசிவு, ரத்த நாளங்கள் அல்லது எச்சரிக்கை அறிகுறிகள் கசிவு, மாகுலர் எடிமா (DME), லென்ஸ் மாற்றங்கள், கண் நரம்பு திசுவுக்கு சேதம் கண்டறியப்படுகிறது. விழித்திரை திரையிடுதல் (Digital Retinal Photography) சர்க்கரை ரெட்டினோபதியின் மாற்றங்களை பதிவு செய்ய உதவுகிறது.
அறிகுறிகள் என்னென்ன? – ஆரம்ப நிலைகளில், சர்க்கரை ரெட்டினோபதி எவ்வித அறிகுறி களையும் கொண்டிருக்காது. பிறகு, படிப்படியாக மோசமான பார்வை, திடீர் பார்வை இழப்பு, மிதவைகள், கண்வலி அல்லது சிவத்தல், மங்கலான அல்லது திடுக்கிடும் பார்வை ஆகியவை காணப்படும்.
சிகிச்சை முறைகள்: சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைப்பது, உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தக் கொழுப்பை கட்டுப்பாட்டில் வைப்பது, லேசர் சிகிச்சை, Anti-VEGF ஊசி சிகிச்சை – பொதுவாக புதிய ரத்த நாளங்கள் உருவாகுவதை தடுக்க உதவுகிறது. விட்ரெக்டமி மூலம் கண்ணாடி
யிழையை ஓரளவு அல்லது முழுவதுமாக அகற்றலாம்.
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் கண் பாதிப்பை தவிர்க்கலாம். சர்க்கரை ரெட்டினோபதி பெரும்பாலும் பார்வை இழப்பு ஏற்படும்வரை அறிகுறிகள் வெளிப்படுத்தாமல் இருப்பதால் முன்கூட்டியே பரிசோதனை செய்வது மிக அவசியம். வருடம் ஒருமுறை முறையான கண் பரிசோதனை செய்வது கட்டாயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று – நவ.14: உலக நீரிழிவு நாள்