EBM News Tamil
Leading News Portal in Tamil

1,500 பேர் பங்கேற்புடன் ராசியான காருக்கு இறுதிச் சடங்கு செய்த குஜராத் குடும்பம் – வீடியோ வைரல் | Gujarati family holds ‘funeral’ for 12-year-old car, over 1,500 attendees join


காந்திநகர்: குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்பம் ஒன்று தங்களின் பிரியத்துக்குரிய 12 வயது கார் ஒன்றுக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகள் நடத்தி பிரியாவிடை கொடுத்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில்தான் இந்த விநோத இறுதிச் சடங்கு நிகழந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1,500 பேர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பல லட்சங்கள் செலவு செய்து நடத்தப்பட்ட காருக்கான இறுதிச் சடங்கு, சம்பந்தப்பட்ட குடும்பத்துக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வைத்து நடத்தப்பட்டது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பல வீடியோ கிளிப்களில், வேகன் ஆர் கார் ஒன்று மாலைகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்பு அந்தக் கார், குடும்ப உறுப்பினர்கள் பிரியாவிடை கொடுக்க மெதுவாக 15 அடி பள்ளத்துக்குள் தள்ளிவிடப்பட்டது. இறுதிச் சடங்கு நடத்தப்பட்ட கார் குஜராத்தைச் சேர்ந்த சஞ்சய் பல்லோரா என்பவருக்குச் சொந்தமானது. அவர் சூரத்தில் கட்டுமான தொழில் செய்து வருகிறார்.

இந்த உணர்வுபூர்வமான நிகழ்வின் பின்னணி குறித்து சஞ்சய் பல்லோரா கூறுகையில், “12 வருடங்களுக்கு முன்பு நான் இந்தக் காரை வாங்கினேன். இந்தக் கார் எங்களின் குடும்பத்துக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தது. நாங்கள் எங்களின் தொழிலில் வளர்ச்சி அடைந்தோம், எங்களின் சமூக அந்தஸ்தும் உயர்ந்தது. அதனால் இந்தக் காரை விற்பனை செய்வதை விட அது எங்களுக்கு கொடுத்த அதிர்ஷ்டத்துக்கு காணிக்கையாக அதற்கு சிறந்த இறுதி மரியாதை கொடுத்து சமாதி எடுக்க விரும்பி இந்த வழிமுறையைத் தேர்ந்தெடுத்தோம்” என்றார் உருக்கமாக!

பல்லோராவின் குடும்பம் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் எதிலும் குறைவைக்கவில்லை. கார் குழிக்குள் இறக்கப்பட்டதும் அது பச்சைத் துணியால் மூடப்பட்டு, பாரம்பரிய முறைப்படி ரோஜா மலர்கள் தூவப்பட்டு பூசாரிகள் மந்திரங்கள் ஓத, பூஜைகள் செய்யப்பட்டது. தங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவந்த காருக்கு ஒரு குடும்பத்தினர் நடத்திய அசாதாரணமான இறுதிச் சடங்கு நிகழ்வு சந்தேகத்துக்கு இடமின்றி அனைவரையும் நெகிழச் செய்தது. ஏனென்றால் அக்குடும்பத்தினர் தங்களின் காருக்கான பிரியாவிடை நிகழ்வை மறக்க முடியாததாக மாற்றியிருந்தனர்.